/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மூங்கில்களில் பூ: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு மூங்கில்களில் பூ: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு
மூங்கில்களில் பூ: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு
மூங்கில்களில் பூ: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு
மூங்கில்களில் பூ: யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு
ADDED : ஜூலை 10, 2024 10:04 PM

கூடலுார் : முதுமலை மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் எஞ்சி இருந்த மூங்கில்களிலும், பூ பூத்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
கூடலுார், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனப்பகுதிகளில் மூங்கில்கள் இயற்கையாக வளர்ந்ததுடன், வனத்துறையினர் சார்பிலும் மூங்கில் காடுகள் உருவாக்கப்பட்டன.
யானைகளின் முக்கிய உணவான மூங்கில்கள், 40 ஆண்டுகளுக்கு பின் பூ பூத்து அதிலிருந்து மூங்கில் அரிசிகள் உருவாகி, அவை உதிர்ந்த பின் முற்றிலும் அழிந்துவிடும்.
கூடலுார், முதுமலை வனப்பகுதிகளில் ஏற்கனவே மூங்கில்கள் பூ பூத்து, முழுமையாக காய்ந்து அழிந்து விட்டது. அப்பகுதியில் யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவைகள் ஊருக்குள் வருவது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில் பூ பூத்தது. மூங்கில் பூக்கள் ஓரிரு மாதங்களில் மூங்கில் அரிசியாக மாறி உதிர்ந்தது. உதிர்ந்த மூங்கில் அரிசியை பழங்குடியினர் சேகரித்து விற்பனை செய்தனர். தொடர்ந்து, மூங்கில்கள் காய்ந்து அழிந்து விட்டது.
இந்நிலையில், இப்பகுதிகளில் எஞ்சி இருந்த மூங்கில்களிலும் தற்போது பூ பூத்துள்ளது. ஓரிரு மாதங்களில் மூங்கில் பூக்கள் அரிசியாக மாறி உதிர்ந்து விடும்; தொடர்ந்து, மூங்கில் காய்ந்து அழிந்து விடும்.
இதனால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து, உணவு தேடி ஊருக்குள் நுழையும் அபாயம் உள்ளது. யானை -மனித மோதல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வனத்துறை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தாவர ஆய்வாளர்கள் கூறுகையில்,'பல்வேறு மருத்துவ பயன்களை கொண்ட மூங்கில்கள் கூடலுார், முதுமலை, மசினகுடி பகுதிகளில் பெருமளவில் அழிந்துவிட்டன. இதனால், யானைகளுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவைகள் ஊருக்குள் வருவது அதிகரிக்கும். இதனை தடுக்க, வனத்துறையினர் யானைகளின் உணவு தேவையை வனப்பகுதியில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.