/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காற்றில் விழுந்த 315 கம்பங்கள்! கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவிப்பு காற்றில் விழுந்த 315 கம்பங்கள்! கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
காற்றில் விழுந்த 315 கம்பங்கள்! கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
காற்றில் விழுந்த 315 கம்பங்கள்! கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
காற்றில் விழுந்த 315 கம்பங்கள்! கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் தவிப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:18 PM

குன்னுார் : நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பலத்த காற்றுடன் பெய்த கனமழையில், 315 மின்கம்பங்கள் விழுந்து மின் பாதிப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக காற்றின் வேக மாறுபாடு காரணமாக வலுவான காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி, நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வலுவான காற்று வீசியது.
மரங்கள் விழுந்து பாதிப்பு
அதில், மாவட்டத்தில் பல இடங்களிலும் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல, பல மரங்கள் மின்கம்பிகள் மீது விழுந்ததால், மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. மாவட்டத்தில் ஊட்டி மற்றும் குன்னுாரில் அதிகபட்சமாக மின்கம்பங்கள் சேதமானது. பல இடங்களிலும் மின் சேவை துண்டிக்கப்பட்டது.
அதில், மின்வாரியம் சார்பில் கொட்டும் மழையிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. குன்னுார் பகுதிகளில், ஜெகதளா மின் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரத்தில் அதிகரட்டி மின் நிலைய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாமல் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். விவசாயிகள் அதிகம் கொண்ட இந்தப் பகுதிகளில் மொபைல் சார்ஜ் செய்வதற்கு கூட முடியாமல் திணறினர். இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் மின் சம்பந்தமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டனர். பள்ளி மாணவ, மாணவிகள் படிப்பதற்கும் சிரமப்பட்டனர்.
315 மின் கம்பங்கள் சேதம்
நீலகிரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் கூறியதாவது:
மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கூடலுார் சுற்றுப்புற பகுதிகளில் மின்கம்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் உயர் மின்னழுத்த மற்றும் குறைந்த அழுத்தகம்பிகள் செல்லும், 315 மின் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. 10 டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டு உடனடியாக மாற்றி சரி செய்யப்பட்டது.
இதற்காக மற்ற இடங்களில் இருந்து மின் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. முதல் நாளில் கோவையில் இருந்து, 20 பேர் வரவழைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுடன் சேர்ந்து பணிகளை மேற்கொண்டனர். குன்னுார், கோத்தகிரியில் இருந்து தலா, 7 பேர், ஊரகப்பகுதியில் இருந்து 10 பேர் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் தற்போது மின் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.