Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்'; ஆசிரியர், பெற்றோர் வரவேற்பு

அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்'; ஆசிரியர், பெற்றோர் வரவேற்பு

அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்'; ஆசிரியர், பெற்றோர் வரவேற்பு

அரசு பள்ளியில் 'வாட்டர் பெல்'; ஆசிரியர், பெற்றோர் வரவேற்பு

ADDED : ஜூன் 30, 2025 04:36 AM


Google News
ராசிபுரம்:தமிழக அரசு பள்ளிகளில், 'வாட்டர் பெல்' முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதை ஆசிரியர்கள், பெற்றோர் வரவேற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட கல்வி அலுவலர், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி, மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, 'வாட்டர் பெல்' இடைவெளி விட வேண்டும். காலை, 11:00 மணி, மாலை, 3:00 மணி என, இரண்டு நேரமும் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதற்காகவே, இடைவேளைவிட வேண்டும். இதில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் குடிப்பதற்கு வசதியாக தண்ணீர் வைப்பதுடன் அவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய ஆசிரியர் ஒருவர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளிகளில் இறைவணக்கம் மட்டுமின்றி மற்ற ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து விளக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர். இந்த திட்டத்திற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, நேரடி நியமனம்பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு கூறுகையில், ''இந்த திட்டத்தால், மாணவ, மாணவியரின் உடல் நலத்திற்கு நன்மை கிடைக்கும். மாணவியர் வீடுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து விடுகின்றனர். ஆனால், மாணவர்கள், 99 சதவீதம் பேர் தண்ணீர் எடுத்து வருவதில்லை. வகுப்பு இடைவெளியில் தண்ணீர் குடிக்கும் பழக்கமும் இல்லை. இந்த கட்டாய இடைவெளியால் மாணவர்களுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஏற்படும். மாலை நேரத்தில் இந்த, 'வாட்டர் பெல்' இடைவெளி மாணவ, மாணவிகளுக்கு நிச்சயம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்,'' என்றார்.

நாமகிரிப்பேட்டை அரசுப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி சசிக்குமார் கூறுகையில், ''மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டால் தண்ணீர் குடிப்பதே இல்லை. இதனால், மலச்சிக்கல், நாக்கு உலர்வது, உதடுகளில் வெடிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். வாட்டர் பெல் இடைவேளை இதுபோன்ற மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us