Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளரை நீக்க போர்க்கொடி; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளரை நீக்க போர்க்கொடி; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளரை நீக்க போர்க்கொடி; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

ராசிபுரம் தி.மு.க., நகர செயலாளரை நீக்க போர்க்கொடி; கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகம் முன் தர்ணா

ADDED : ஜூலை 31, 2024 07:16 AM


Google News
ராசிபுரம்: ராசிபுரம், தி.மு.க., நகர செயலாளரை நீக்கக்கோரி, தி.மு.க., - வி.சி., - கொ.ம.தே.க., கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க.,-22, அ.தி.மு.க.,-2, காங்., - வி.சி., சுயேட்சை தலா, ஒன்று என, மொத்தம், 27 கவுன்சிலர்கள் உள்ளனர். கொ.ம.தே.க., கவுன்சிலர், தி.மு.க., சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர். தி.மு.க., நகர செயலாளர் சங்கரின் மனைவி கவிதா, தலைவராக உள்ளார்.

கடந்த, 27 மாலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற கவுன்சிலர்கள் கலைமணி, கந்தசாமி ஆகியோருக்கும், நகர செயலாளர் சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கவுன்சிலர் கலைமணி மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், நகர செயலாளர் சங்கர், தலைவர் கவிதா ஆகிய இருவரும் பணியில் குறுக்கிடுவதாகவும், கவுன்சிலர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், நேற்று கலைமணிக்கு ஆதரவாக, தி.மு.க., - வி.சி., - கொ.ம.தே.க.,வை சேர்ந்த கவுன்சிலர்களான, 4வது வார்டு பழனிசாமி, 5வது வார்டு ஸ்ரீவித்யா, 6வது வார்டு சரவணன், 8வது வார்டு சண்முகம், 17வது வார்டு நிர்மலா, 20வது வார்டு ஜெயம்மாள், 22வது வார்டு ஜெய்முனிசா, 23வது வார்டு நாகேஸ்வரன், 24வது வார்டு கலைமணி, 25வது வார்டு லதா, 26வது வார்டு நடராசன், 27வது வார்டு கந்தசாமி என, 11 கவுன்சிலர்கள், ராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'கவுன்சிலர்களை தரக்குறைவாக பேசும் சங்கரை, நகர செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, கோஷமிட்டனர்.

இதுகுறித்து, கவுன்சிலர் கலைமணி கூறியதாவது:

கடந்த, 5ல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில், புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் குறித்து கருத்துகேட்பு கூட்டம் நடந்தது. ஆனால், கூட்டம் நடப்பதற்கு முன்பே, நகர செயலாளர் சங்கர் புதிய பஸ் ஸ்டாண்ட் இடமாற்றத்துக்கான இடத்தை பார்த்து, தன்னிச்சையாக முடிவு செய்துவிட்டார். பின், பெயரளவிற்கு கருத்துகேட்பு கூட்டம் நடத்தினர். இதனால், கவுன்சிலர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதையடுத்து, கடந்த, 27ம் தேதி நகராட்சி அலுவலகத்திற்கு, சங்கர் வரச்சொன்னார். அப்போது அங்கு சென்ற என்னை, ஒருமையில் பேசி கீழே தள்ளிவிட்டார். மயக்கமடைந்த நான், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினேன். சங்கரின் தலையீட்டால், மாநகராட்சி கமிஷனர் முதல் இன்ஜினியர் வரை, இங்கு யாரும் நீண்ட நாட்கள் பணியில் இருப்பதில்லை. 'நான் சொல்லும் இடத்தில் கையெழுத்து போட வேண்டும்; இல்லையென்றால் தொலைத்துவிடுவேன்' என, கவுன்சிலர்களை மிரட்டுகிறார். எனவே, தி.மு.க., தலைமை உரிய நடவடிக்கை எடுத்து, நகர செயலாளர் சங்கரை மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து நகர செயலாளர் சங்கர் கூறுகையில், ''கவுன்சிலர் கலைமணி சொல்வது ஒன்று கூட உண்மையில்லை. ஆரம்பத்தில் இருந்தே ஒருசில கவுன்சிலர்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தான் செயல்பட்டு வந்தனர். அதே போல் தான், நேற்றும் நடந்து கொண்டனர்,'' என்றார்.

கவுன்சிலர்கள் 'பல்டி'

கடந்த, 26 மாலை, 'புதிய பஸ் ஸ்டாண்டை அணைப்பாளையம் பகுதியில் இடமாற்றம் செய்ய வேண்டும்' என, நகர செயலாளர் சங்கர் தலைமையில், மனித சங்கிலி போராட்டம், ராசிபுரத்தில் நடந்தது. அப்போது, கவுன்சிலர்கள் கலைமணி, கந்தசாமி, நாகேஸ்வரன், லதா, சரவணன், நடராஜன் ஆகியோர் சங்கருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டனர். மறுநாள் மாலை வரை இவர்கள் சங்கருக்கு ஆதரவாக இருந்துவிட்டு, ஒரே நாளில் பல்டி அடித்துள்ளது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us