Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காட்டாற்றில் டேங்கர் லாரி சிக்கியதில் நாமக்கல் லாரி டிரைவர் பலி; 2 பேரை தேடும் பணி தீவிரம்

காட்டாற்றில் டேங்கர் லாரி சிக்கியதில் நாமக்கல் லாரி டிரைவர் பலி; 2 பேரை தேடும் பணி தீவிரம்

காட்டாற்றில் டேங்கர் லாரி சிக்கியதில் நாமக்கல் லாரி டிரைவர் பலி; 2 பேரை தேடும் பணி தீவிரம்

காட்டாற்றில் டேங்கர் லாரி சிக்கியதில் நாமக்கல் லாரி டிரைவர் பலி; 2 பேரை தேடும் பணி தீவிரம்

ADDED : ஜூலை 17, 2024 10:15 PM


Google News
புதுச்சத்திரம்:கர்நாடகா மாநிலம், சிரூர் பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட டேங்கர் லாரி டிரைவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம், தாத்தையங்கார்பட்டியை சேர்ந்தவர் சின்னண்ணன், 54; டேங்கர் லாரி டிரைவர். இவரது மனைவி கீதா, 42. இவர்களுக்கு பாரதிவேல், 9, என்ற மகன் உள்ளார். சில தினங்களுக்கு முன், டிரைவர் சின்னண்ணன், எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரியை ஓட்டிக்கொண்டு, கர்நாடகா மாநிலம் சென்றார்.

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், தொடர்ந்து செல்ல முடியாமல், கடந்த, 16ல் சிரூர் என்ற இடத்தில், சாலையோரம் இருந்த டீ கடை அருகே லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது நிலச்சரிவு ஏற்பட்டு, காட்டாற்று வெள்ளத்தில், டிரைவர் சின்னண்ணனுடன் டேங்கர் லாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் சின்னண்ணன் உயிரிழந்தார். இதை நாமக்கல்லில் செயல்படும் தென் மண்டல எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் உறுதிசெய்துள்ளனர்.

இதேபோல், பாப்பிநாய்க்கன்பட்டி, கரையாம்புதுாரை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன், 34, தர்மபுரி மாவட்டம், கல்லாவியை சேர்ந்த லாடி டிரைவர் முருகன் ஆகியோரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, டிரைவர் சின்னண்ணன் மனைவி கீதா கூறியதாவது:

கர்நாடகாவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி என் கணவர் உயிரிழந்து விட்டதாக, கடந்த, 16 இரவு, 10:00 மணிக்கு தகவல் வந்தது. கடந்த, திங்கட்கிழமை என்னிடம் மொபைல் பேனில் பேசிய அவர், அடுத்த மாதம் வீட்டிற்கு வருவதாக தெரிவித்தார். அதற்குள் உயிரிழந்து விட்டார் எனக்கூறி கதறி அழுதார். தொடர்ந்து, என் கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, நாமக்கல் கலெக்டர் உமா கூறுகையில், ''கர்நாடகாவில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த டேங்கர் லாரி டிரைவர் சின்னண்ணன் உடலை, தமிழகம் கொண்டு வர, அரசு சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us