/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ஏழை மீனவ குடும்பத்தினர் "நெகிழ்ச்சி'' : நா.த.கட்சியினரின் "ஈர மனசு''ஏழை மீனவ குடும்பத்தினர் "நெகிழ்ச்சி'' : நா.த.கட்சியினரின் "ஈர மனசு''
ஏழை மீனவ குடும்பத்தினர் "நெகிழ்ச்சி'' : நா.த.கட்சியினரின் "ஈர மனசு''
ஏழை மீனவ குடும்பத்தினர் "நெகிழ்ச்சி'' : நா.த.கட்சியினரின் "ஈர மனசு''
ஏழை மீனவ குடும்பத்தினர் "நெகிழ்ச்சி'' : நா.த.கட்சியினரின் "ஈர மனசு''
ADDED : ஜூலை 13, 2024 04:03 PM

நாகப்பட்டினம் :
நாகையில், கடலோரத்தில் மின்சாரம் இல்லாமல், 4 குழந்தைகளுடன், குடிசை வீட்டில் இருட்டில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த ஏழை மீனவ குடும்பத்திற்கு, மின்சார வசதி மற்றும் அடிப்படை பொருளுதவிகளை, நாம் தமிழர் கட்சியினர் சத்தமின்றி செய்து கொடுத்தனர்.
நாகை, சாமந்தான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம்,40; இவரது மனைவி உஷா,34; இவர்களுக்கு 17, 16 வயதில் இரண்டு பெண் குழந்தைகள்,13 மற்றும் 12 வயதில் மகன்கள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் குடும்பத்தோடு தங்கி மீன்பிடித் தொழிலுக்கு சென்று வந்த செல்வம், உழைத்த பணத்தை மதுவிற்கு செலவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டிற்கு முன் ் விபத்தில் ஒரு கால் பாதிக்கப்பட்டதால், பிழைக்க வழியின்றி, சாமந்தான்பேட்டையில் குடியேறியுள்ளார்.
சாமந்தான்பேட்டை கடற்கரையில், உஷா மீன்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில், குடும்பத்தை பராமரித்து வந்துள்ளார். உறங்க இடம் தேவை என்பதால், கடலோரத்தில் சுனாமியில் சேதமடைந்து, பராமரிப்பின்றி கிடந்த வேறொரு மீனவர் வீட்டை வாங்கி, சிரமத்திற்கிடையில் கீற்றால் கூரை வேய்ந்து வசித்து வந்தனர். பகலில் வீட்டிற்குள்ளும், இரவில் திறந்த வெளியிலும் படுத்துறங்குவதில், தனது மகள்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், இரண்டு மகள்களையும் உறவினர் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மகன்களுடன் இருட்டில் இரவை கழித்து வசித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக வந்த அரசியல் கட்சியினரிடம் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அரசியல்வாதிகள் இவர்களிடம் ஒட்டுக்களை மட்டும் கேட்டவர்கள், ஏழை குடும்பத்தின் கோரிக்கையை புறந்தள்ளினர்.
அரசியல்வாதிகளிடம் வைத்த கோரிக்கை கடல் காற்றோடு சென்று விட்டதாக, செல்வம் குடும்பத்தினர் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
தேர்தலுக்கு பின் செல்வம் குடும்பத்தினரை தேடி வந்த நாம் தமிழர் கட்சியினர், அரசு அலுவர்களை தேடி சென்று உரிய அனுமதி பெற்று, குடிசையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள மின்கம்பத்தில் இருந்து மின் இணைப்பை குடிசைக்கு கிடைக்க வைத்தனர். தேவையான மின் உபகரணங்களையும் குடிசை வீட்டில் பொருத்தினர்.
நேற்று முன்தினம் மாலை செல்வம் வீட்டிற்கு சென்ற, நா.த.க., மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், சட்டசபை தொகுதி பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர், மின்சார பயன்பாட்டை வி.ஏ.ஒ., செல்வமணியை வைத்து மின் இணைப்பு மீட்டரை துவக்கி வைத்தனர். குடும்பத்திற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நோட்டு, பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்களையும் வழங்கி, ஏழை மீனவ குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
தேர்தல் நேரத்தில் ஒட்டு சேகரித்தோமா, சென்றோமா என்றில்லாமல், தேர்தல் முடிந்தாலும் தேடி வந்து, ஆரவாரமில்லாமல் உதவிய நா.த கட்சியினர் செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.