Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை

பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் டேனிஷ்கோட்டை, கவர்னர் மாளிகை

ADDED : ஜூன் 01, 2025 07:40 AM


Google News
Latest Tamil News
மயிலாடுதுறை : தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, கவர்னர் மாளிகை, 7.96 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாத நாயக்கருக்கும், டென்மார்க் நாட்டின் இளவரசர் நான்காம் கிறிஸ்டியனுக்கும் இடையே தரங்கம்பாடியில் வியாபார ஸ்தலம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, டேனிஷ் நிர்வாக தலைமையகமாக, 1620ல், கடற்கரை அருகே தரங்கம்பாடி டேனிஷ்கோட்டை அமைக்கப்பட்டது.

தற்போது, தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள டேனிஷ் கோட்டையின் மேல்தளத்தில், பண்டைய கால பொருட்கள், பீரங்கிகள், பட்டயங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட அகழ்வாய்வு பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.

டேனிஷ் மன்னர்கள், மதகுருமார்கள் தங்கும் அறை, கீழ்தளத்தில் வீரர்கள் தங்கும் அறை, சிறைச்சாலை, வெடிபொருட்கள் வைக்கும் அறை, குதிரை லாயம், தண்ணீர் சேமிப்பு அறை, உணவு மற்றும் தானியங்கள் சேமிப்பு அறை போன்றவற்றுடன் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது.

டென்மார்க் நாட்டின் ஆளுகைக்கு கீழ் இருந்தபோது, தரங்கம்பாடியை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளுநர் மற்றும் மாகாண கலெக்டர் தங்குமிடமான டேனிஷ் கவர்னர் மாளிகை, கோட்டையின் எதிரில் உள்ளது.

நாள்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். 400 ஆண்டுகளை கடந்தும் இன்றளவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் டேனிஷ்கோட்டை மற்றும் டேனிஷ் கவர்னர் மாளிகை ஆகியவற்றை தமிழக தொல்லியல் துறை சார்பில், 7.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பித்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சுவற்றில் பழைய பூச்சுகள் அகற்றப்பட்டு, புதிய சுண்ணாம்பு கலவை பூசப்படுகிறது.

இதற்காக சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் ஆகியவற்றுடன் கல், மணல், செங்கல் சேர்த்து பழமையான கட்டுமான முறையிலான கலவை தயார் செய்யப்பட்டு, பயன்படுத்தப்படுகிறது. இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், கட்டுமான தொழிலாளர்கள் பாரம்பரிய முறையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் நிறைவு பெற்ற பின்னர் டேனிஷ் கோட்டை மற்றும் கவர்னர் மாளிகை புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us