தினமலர் செய்தியால் பூங்காவில் பணிகள்
தினமலர் செய்தியால் பூங்காவில் பணிகள்
தினமலர் செய்தியால் பூங்காவில் பணிகள்
ADDED : ஜூன் 14, 2025 05:26 AM
திருநகர்:தினமலர் செய்தி எதிரொலியாக திருநகர் அண்ணா பூங்காவை ரூ. 2.57 கோடியில் அறிவியல் பூங்காவாக மாற்றும் பணி துவங்கியது.
அண்ணா பூங்காவில் ஹாக்கி, கைப்பந்து, பூப்பந்து விளையாட்டு மைதானங்கள் உள்ளன. இந்த மைதானங்களை நவீனப்படுத்துவதுடன், அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், பொறியியல் தொடர்புடைய வெளிப்புற சாதனங்கள் கற்றல் கருவிகளாக நிரந்தரமாக அமைக்கப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மாதிரிகள், பவுதீகம், ரசாயனம், உயிரியல், கணித கோட்பாடுகள், விதிகள், நடைமுறை பயன்பாடுகள், விளையாட்டு மூலம் கற்றல், ஆசிரியர்களின் விளக்க உரை, செயல்முறை கூட்டங்கள் நடத்தவும், அறிவியல் வினாடி வினா, அறிவியல் கண்காட்சிகள் நடத்த ஏதுவாக பல்நோக்கு மையம் என பல்வேறு அம்சங்களுடன் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அறிவியல் பூங்காவாக மாற்றப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா மார்ச்சில் நடந்தது. மூன்று மாதங்களாகியும் பணிகள் துவங்கவில்லை. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக நேற்று முன்தினம் பூங்காவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி துவங்கியது.