/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உண்மையான ஆன்மிக வளர்ச்சி எது வரலொட்டி ரெங்கசாமி விளக்கம் உண்மையான ஆன்மிக வளர்ச்சி எது வரலொட்டி ரெங்கசாமி விளக்கம்
உண்மையான ஆன்மிக வளர்ச்சி எது வரலொட்டி ரெங்கசாமி விளக்கம்
உண்மையான ஆன்மிக வளர்ச்சி எது வரலொட்டி ரெங்கசாமி விளக்கம்
உண்மையான ஆன்மிக வளர்ச்சி எது வரலொட்டி ரெங்கசாமி விளக்கம்
ADDED : செப் 03, 2025 05:55 AM

மதுரை : உண்மையான ஆன்மிக வளர்ச்சி எதுவென மதுரையில் எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி விளக்கமளித்தார்.
மதுரை தெய்வநெறிக் கழகம் சார்பில், சுவாமி சிவானந்தர் 139 வது ஜெயந்தி, சுவாமி சிதானந்தர் 109வது ஜெயந்தி, தெய்வ நெறிக் கழக 87வது ஆண்டு விழா ஆகியவை 'திரிவேணி' விழாவாகக் கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் சன்னதி அருகே நடந்த விழாவில் டாக்டர் ராமசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மதுரை சிவானந்த தபோவன தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி வரவேற்றார்.
'குரு மஹிமை' குறித்து எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி பேசியதாவது:
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று, அம்மனை தரிசித்து, சுவாமி சன்னதிக்குச் சென்றபோது, மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. 'தாயே, உங்கள் அன்பைச் சிலாகித்து எழுதுகிறேன். உங்கள் அரசவையில் என்னை கவுரவிக்க வேண்டாமா' என எண்ணினேன்.
சுவாமி சன்னதியில் நின்ற போது, அர்ச்சகர் ஒருவர் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று, சிறப்பு தரிசனம் செய்ய வைத்தார். 'என்னை வேறு யாரோ என்று நினைக்கிறீர்கள்' என்று நான் சொல்ல, 'நீங்கள்தானே பச்சைப் புடவைக்காரியைப் பற்றி எழுதுபவர். உங்களுக்கு மரியாதையைச் செய்யாவிட்டால் பச்சைப் புடவைக்காரி என்னைத் தொலைத்துவிடுவாள்' என அர்ச்சகர் தெரிவித்த போது கண்கலங்கினேன்.
இதே கோயிலில் பச்சைப் புடவைக்காரியிடம், 'நான் வாழும்வரை எழுத வேண்டும்' என்ற வரத்தைக் கேட்டேன். 'நீ எழுதும்வரை வாழ்வாய்' என்று வரத்தைச் சற்றே மாற்றிக் கொடுத்தாள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். தாய் தான், தந்தை யார் எனக் காட்ட வேண்டும். தந்தை தான் குழந்தையை நல்ல குருவிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குரு தான் இறைவனிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்திய விமானப் படை விமானியாக வேண்டும் என விரும்பினார். டில்லியில் அதற்கான நேர்காணலில் பங்கேற்றார். ஆனால் தேர்வாகவில்லை. மனம் உடைந்த அவர், ஊர் திரும்பாமல் ரிஷிகேஷுக்குச் சென்றார். சிவானந்தரின்ஆசிரமத்தில் அவருக்குக் அமைதி கிடைத்தது. 'ஏன் இந்த கவலை' என சிவானந்தர் அவரிடம் கேட்டார். விமானி வேலை கிடைக்காததைச் சொன்னபோது, சுவாமியின் வார்த்தைகள் அவரை அகிலமே போற்றும் மனிதராக மாற்றின.
'இந்தத் தோல்வியை மறந்துவிடு. இறைவன் உனக்காக அமைத்திருக்கும் பாதையில் உன்னைத் திருப்புவதற்குத்தான் இந்தத் தோல்வி. உன்னுடைய பிறப்பின் உண்மையான நோக்கத்தைத் தேடத் தொடங்கு. இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிந்து வாழக் கற்றுக்கொள். மனிதன் இறைவனுடன் ஒன்றும்போது தான் உண்மையான மகிழ்ச்சி கிடைக்கிறது என்றார்.
பச்சைப் புடவைக்காரியைக் கண்குளிரப் பார்க்கும் நிலையிலிருந்து முன்னேறி, அவரது கண்கள் மூலமாக பிரபஞ்சத்தைப் பார்ப்பதுதான் உண்மையான ஆன்மிக வளர்ச்சி. இவ்வாறு அவர் பேசினார். செயலாளர் கிஷோர் குமார் நன்றி கூறினார்.