ADDED : செப் 22, 2025 03:42 AM
சோழவந்தான் : சோழவந்தான் அருகே கீழப்பெருமாள்பட்டியில் ரேஷன் கடை முன்பு கழிவு நீர் தேங்குவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
அப்பகுதி விஜயா கூறியதாவது: மந்தை அருகே ரேஷன் கடை அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள தெருவில் சாக்கடை கால்வாய் வசதி செய்யப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெரு முழுவதும் ஓடி ரேஷன் கடை அருகே தேங்குகிறது.
படிக்கட்டிற்கு கீழே கழிவு நீர் ஓடுவதால் அதைகடந்து கடைக்குச் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் உணவுப் பொருட்களை வாங்கிவிட்டு திரும்பும் போது கழிவுநீரில் வழுக்கி விழுந்து காயம் அடைவதுடன் உணவுப் பொருட்களும் வீணாகின்றன.
இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. உணவுப் பொருட்களுக்கு அருகே கழிவுநீர் உள்ளதால் நோய் கிருமிகள் மூலம் காலரா, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.