Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள்; மொக்கத்தான்பாறை அருகே கண்டுபிடிப்பு

மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள்; மொக்கத்தான்பாறை அருகே கண்டுபிடிப்பு

மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள்; மொக்கத்தான்பாறை அருகே கண்டுபிடிப்பு

மூவாயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள்; மொக்கத்தான்பாறை அருகே கண்டுபிடிப்பு

ADDED : செப் 15, 2025 03:50 AM


Google News
Latest Tamil News
எழுமலை : மதுரை மாவட்டம் எழுமலை டி.கிருஷ்ணாபுரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோட்டைமேடு பகுதி மூலிக்கல் பாறையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் குழு கண்டறிந்துள்ளது.

உசிலம்பட்டி பகுதியில் மனித நாகரீகம் 3000 ஆண்டுகளாக இருப்பதற்கான தொல்லியல் எச்சங்கள் கிராமங்கள், மலைப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன.

வகுரணி மூன்றுமலையில் புலியின் கோடு ஓவியத்தை சிவப்பு நிறத்தில் வரைந்துள்ளனர். மேலும், பூமி, நிலாவின் சுழற்சி, அமாவாசை, பவுர்ணமிக்கு இடையேயான சுழற்சி, கட்டடங்கள், ஆண், பெண்ணை பிரித்துக்காட்டும் ஓவியங்கள் உள்ளன. இதனருகே புத்துார் மலையில் சமணர் சிற்பங்களுடன் கூடிய குகையிலும் வில்லேந்திய மனிதர், கால்நடைகள் குறித்த ஓவியங்கள் காணப்படுகின்றன.

மலையடிவாரம் மேட்டுப்பட்டி பகுதியில் முதுமக்கள் தாழியில் துருப்பிடித்து சிதைந்த இரும்புக் கத்தி இருந்தது. எழுமலை செல்லும் வழியில் பாறைப்பட்டியில் கல்திட்டைகள், பாறையில் கப்மார்க், சூலப்புரம் உலைப்பட்டி பகுதியில் முதுமக்கள் தாழிகள், கல்திட்டைகள் என பல்வேறு தொல்லியல் எச்சங்கள் தொடர்ந்து கிடைக்கின்றன.

தற்போது சூலப்புரம் அருகே டி.கிருஷ்ணாபுரத்தில் இருந்து மொக்கத்தான்பாறை - வாழைத்தோப்பு இடையே கோட்டைமேடு மலையடிவாரம் மூலிக்கல் பாறை அடியில் 10 க்கும் மேற்பட்டோர் தங்கும் அளவுக்கான பகுதியில் வெள்ளை நிறத்தால் ஆன பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் கூறியதாவது: கோட்டைமேடு மூலிக்கல் பாறையில் கிடைத்த ஓவியங்களில் பல பழமையானதாகவும், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்ததாகவும் உள்ளது. அவை மூவாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று உறுதிபட கூறலாம். ஆறு மனிதர்கள் கை, கால்களை துாக்கிக் கொண்டு நிற்பது போலவும், அருகில் மான் ஒன்று நிற்பது போலவும் தெளிவான ஓவியங்களாக உள்ளது.

இதனருகிலேயே வெள்ளை நிறம் மங்கிய நிலையில் யானை உருவ ஓவியம் காணப்படுகிறது. நீர்நிலைகளை குறிப்பிடும் வட்டங்கள், விலங்கின் மேல் மனிதர் பயணம் செய்வது போன்ற ஓவியங்கள், மூன்று கோடுகள் எனவும் ஓவியங்கள் உள்ளன.

மனித நாகரீகம் மலைக்குகையில் இருந்து, தரைப்பகுதியில் வீடு கட்டி பாதுகாப்பான வசிப்பிடமாக உருவாவதற்கு முன்னோடியாக பாறையின் அடியில் பாதுகாப்பாக இருக்க கம்பு, முட்செடிகளை பயன்படுத்தி தடுத்துள்ளனர். மலையடிவாரம் மொக்கத்தான்பாறையில் இன்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்த தொல்லியல் எச்சங்கள் உள்ள பகுதிகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us