ADDED : ஜூன் 11, 2025 01:05 AM

கோமியம், மாட்டுச்சாணத்துடன் நாட்டுக்கோழி முட்டையை கலந்து தயாரித்த இயற்கை உரக்கரைசல் மூலம் நெற்பயிரில் பூச்சி தாக்குதல் குறைந்து நல்ல மகசூல் கிடைத்தது. எனது எட்டாண்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியை மற்ற விவசாயிகளுக்கு கற்றுத் தருகிறேன் என்கிறார் நாகப்பட்டினம் திருமருகல் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சத்தியமூர்த்தி.
இருபது ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வரும் சத்தியமூர்த்தியின் புதிய உரக்கரைசல் கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியதாவது:
எனக்கு 5 ஏக்கர் நிலமுள்ளது, ஆற்றுப்பாசன முறையில் தான் விவசாயம் செய்கிறோம். வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை காய்கறிகளுக்கு இந்த கரைசலை பயன்படுத்திய போது இலைகள் அபரிமிதமான பச்சை நிறத்தில் இருந்தது. தொடர்ந்து எட்டாண்டுகளாக சோதனை அடிப்படையில் இந்த கரைசலை தயாரித்து கடைசியாக நெல்லில் வெற்றி பெற்றேன்.
உயிர் கரைசல் தயாரிப்பதற்கு முன்வரை கடலை புண்ணாக்கு, பப்பாளி இலை போன்றவற்றை சோதனை அடிப்படையில் உரமாக்கி பார்த்தேன். கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது நல்லது, அதில் அமினோ அமிலங்கள் இருக்கிறது என்று கேள்விப்பட்டதும் பயிர்களுக்கும் முட்டையை பயன்படுத்தினால் என்ன என்று யோசித்தேன். சோதனை முயற்சியாக 10 லிட்டர் கோமியம், 10 லிட்டர் மாட்டு சாணத்துடன் 4 முட்டைகள் சேர்த்த போது துர்நாற்றம் வீசியது. இந்த நிலையில் நுண்ணுயிர்கள் பெருகாமல் உறக்கநிலைக்கு சென்றுவிடும் என்பதால் பயன் தராது என புரிந்து கொண்டேன்.
அடுத்ததாக 3 முட்டைகளை ஊற்றிய போது துர்நாற்றம் வந்தது. இந்த முறை 2 முட்டைகளை ஊற்றிய போது துர்நாற்றம் வரவில்லை. அதை கோவை பல்கலையின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுக்கு அனுப்பிய போது பாஸ்பரஸ் சத்து அளவு குறைவாக இருந்தது தெரியவந்தது. மீண்டும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி முட்டை ஓடைகளையும் நொறுக்கி சேர்த்த போது உரத்தின் பயன் கிடைத்தது.
இது பஞ்சகவ்யா கரைசலை விட சிறந்த உரமாக உள்ளதென நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் உறுதி செய்யப்பட்டது. அதன்பின் தேசிய நெல் திருவிழாவில் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தேன்.
3 ஏக்கரில் ஐ.ஆர்., 20 ரகமும் 2 ஏக்கரில் துாயமல்லி நெல் பயிரிட்டேன். ஒரு ஏக்கருக்கு 30 லிட்டர் கரைசலை பாசன நீருடன் உரமாக வழங்கினேன். துாயமல்லியில் களைகள் அதிகம் வளர்ந்ததால் மகசூல் கிடைக்கவில்லை. ஐ.ஆர்., 20 விதைகளை துாவி முதல் தண்ணீர் பாய்ச்சும் போதே ஒரு லிட்டர் உயிர் கரைசலுடன் 20 லிட்டர் தண்ணீர் வீதம் சேர்த்தேன். அடுத்து 60 ம் நாளில் மீண்டும் தண்ணீருடன் கரைசலை பாய்ச்சினேன்.
பூச்சிக்கொல்லி, உரம் பயன்படுத்தவில்லை. அருகில் உள்ள விவசாயிகள் என் வயலைப் பார்த்து, அவர்களது பருத்திச் செடிகளுக்கு இந்த கரைசலை கேட்டனர். இதை பயன்படுத்திய போது பருத்தியில் மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொண்டேன். ஐ.ஆர்.20 ரகத்தில் அதிகமான காற்றடித்து நெல் கருக்காய் ஆனது. ஆனாலும் மற்றவர்களின் வயல்களை ஒப்பிடும் போது 60 கிலோ அளவுள்ள 24 மூடை நெல் கிடைத்தது சந்தோஷம் தான் என்றார்.
இவரிடம் பேச: 94430 60963
- எம்.எம்.ஜெயலெட்சுமி, மதுரை