Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ திருப்பரங்குன்றம் மலை விவகாரம் 3 வது நீதிபதி தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் 3 வது நீதிபதி தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் 3 வது நீதிபதி தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் 3 வது நீதிபதி தீர்ப்பு ஒத்திவைப்பு

ADDED : செப் 09, 2025 05:46 AM


Google News
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்கை விசாரித்த 3வது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருப்பரங்குன்றம் மலை உரிமையாளர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம். மலை மீதுள்ள சுல்தான் சிக்கந்தர் தர்காவிற்கு தர்கா, அதன் முன்புற கொடிமரம், நெல்லித்தோப்பு, தர்காவிற்கு செல்லும் படிக்கட்டு, புதுமண்டபம் தவிர மலையின் பிற பகுதிகள் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமானவை என ஆங்கிலேயர் ஆட்சியின்போது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலர் மலை மீது ஆடு, கோழி பலியிட, மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயற்சிப்பதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுபோல் பரமசிவம் மனு செய்தார். ஹிந்து மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் ராம லிங்கம், 'கோயிலுக்கு சொந்தமான பாதையை மறைத்து நெல்லித்தோப்பில் முஸ்லிம்தொழுகை நடத்த தடை விதிக்க வேண்டும்,' என மனு செய்தார்.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது. ஜூன் 24ல் நீதிபதி ஜெ.நிஷாபானு அனைத்து மனுக்களை தள்ளுபடி செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி மாறுபட்ட உத்தரவு பிறப்பித்தார். ௩வது நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஏற்கனவே அவரது விசாரணையில் தமிழக அரசு தரப்பு: சிக்கந்தர் மலை என அழைக்க ஆவணங்கள் உள்ளன. ஆடு, கோழி பலி நடைமுறை ஏற்கனவே உள்ளது. ஒருவர் மத உரிமையில் மற்றொருவர் தலையிட முடியாது.

மத்திய அரசு தரப்பு: ஒட்டுமொத்த மலை மத்திய தொல்லியல்துறைக்கு சொந்தம். மலையிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால்தான் எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும். மலையை அளவீடு செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லை.

தர்கா நிர்வாகம் தரப்பு: தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதை ஹிந்து அமைப்புகள் தடுக்க முடியாது. திருப்பரங்குன்றம் மலை ஸ்கந்தர் மலை, சிக்கந்தர் மலை என வருவாய் ஆவணங்களில் உள்ளது. 1923ல் மதுரை சார்பு நீதிமன்றம், 1931ல் லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்புகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. தர்காவில் வழிபாட்டு உரிமையை அதன் நிர்வாகம் முடிவு செய்யும். இவ்வாறு விவாதம் நடந்தது.

நேற்று நீதிபதி ஆர்.விஜயகுமார் விசாரித்தார்.

சோலை கண்ணன், பரமசிவம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கார்த்திகேயன், வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வாதிட்டதாவது: மலையை சிவனாக மக்கள் வழிபடுகின்றனர் என லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பளித்துள்ளது. பரமசிவம் என்பவர் ஆடு, பலியிடும் வழக்கம் உள்ளது என வாக்குமூலம் அளித்ததாக அரசு தரப்பு கூறுகிறது. அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவில்லை. அரசு பதிலில் முரண்பாடுகள் உள்ளன. முஸ்லிம்களுக்கு சாதகமான நிலைப்பாட்டில் அரசு உள்ளது. முஸ்லிம்கள் தரப்பு,'100 ஆண்டுகளாக பலியிடும் வழக்கம் உள்ளது,' என்கிறது. மத ரீதியாக பலியிடுவது என்றாலும் வதைக்கூடத்தில்தான் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மலையின் புனிதத்தை காக்க ஆடு, கோழி பலியிடுவதை தடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது என்றனர். நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us