Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கேள்விகளால் திணறடிக்கிறாங்க... 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்

கேள்விகளால் திணறடிக்கிறாங்க... 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்

கேள்விகளால் திணறடிக்கிறாங்க... 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்

கேள்விகளால் திணறடிக்கிறாங்க... 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் புலம்பல்

ADDED : ஜூலை 04, 2025 03:18 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் தி.மு.க., சார்பில் நேற்று துவங்கிய 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற வீடு தோறும் பிரசாரம் நிகழ்ச்சியில், பல இடங்களில் 'மகளிருக்கான உரிமை தொகை இன்னும் கிடைக்கவில்லை, அங்கன்வாடி மையம், ரேஷன் கடை எப்போது திறப்பீங்க, வார்டுகளில் புதிய பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்புக்கு, பராமரிப்புக்கு அதிகம் வசூலிக்கின்றனர்...' மக்கள் தெரிவித்ததால் தி.மு.க.,வினர் நெளிந்து சமாளித்தனர். அமைச்சர், மா.செ.,க்கள் பங்கேற்ற பகுதிகளில் சம்பந்தப்பட்ட வீடுகளில் முன்கூட்டியே கட்சியினர் சென்று ஏற்பாடு செய்திருந்தனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற கோஷத்துடன் வார்டு வாரியாக மக்களை சந்தித்து, அரசு திட்டங்களை தெரிவித்து வீடு தோறும் பிரசாரம் மேற்கொண்டு புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன்படி மதுரையில் அனைத்து பகுதியிலும் இப்பிரசாரத்தை தி.மு.க.,வினர் துவக்கினர். அமைச்சர் மூர்த்தி கிழக்கு தொகுதியில் அய்யர்பங்களா, எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தார்.

மண்டல தலைவர் வாசுகி, பகுதி செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர் தி.மு.க., செயலாளர் தளபதி புதுார் பகுதியில் துவக்கினார்.

இதுபோல் வார்டுகள் தோறும் வட்ட செயலாளருடன் தலா ஒரு பாகமுகவர், பூத் டிஜிட்டல் ஏஜன்ட், மகளிரணி, இளைஞரணி, வார்டு நிர்வாகி குழு இப்பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி பகுதியில் குறிப்பாக புதுாரில் பகுதியில் சென்றபோது 'அங்கன்வாடி மையம் எப்போது திறப்பீங்க, ரேஷன் கடை எப்போது வரும்' என கேள்வி கேட்டனர்.

இதுபோல் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை, பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு பெற ரூ.ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்கின்றனர், ரோடுகள் சரியில்லை, குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அப்படியே கிடக்கின்றன போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் பிரசாரக் குழு திணறியது.

தி.மு.க.,வினர் கூறியதாவது: கட்சித் தலைமை எதிர்பார்த்த முடிவை இப்பிரசாரம் தருமா என்பது சந்தேகம் தான். இப்பிரசாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மிகக்கடுமையாக உள்ளன. களத்திற்கு சென்று கட்சி சாராத மக்களை சந்திக்கும் போது தான் அவர்கள் உணர்வு வெளிப்படுகிறது.

முதல்வர், அமைச்சர்கள் வருகையின்போது கட்சியினர் காசு கொடுத்து மக்களை திரட்டி கூட்டத்தை காட்டுகின்றனர். அவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு பெயருக்கு 'வாழ்க' கோஷமிடுகின்றனர்.

அதுபோல் அமைச்சர், மா.செ.,க்கள் இப்பிரசாரத்திற்கு செல்லும் இடங்களிலும் அதே ஸ்டைலில் கட்சியினர் முன்கூட்டியே சென்று ஏற்பாடு செய்துவிடுகின்றனர். இதனால் அவர்களிடம் யாரும் கேள்வி கேட்பதில்லை.

ஆனால் குழுவினர் செல்லும்போது பல சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. அரசு செய்த நலத்திட்டங்களை சொல்ல முடியாமல், அரசு மீதுள்ள எதிர்ப்பை தான் சந்தித்து, அதை சமாளிக்கிறோம் என்றனர்.

பிரசார குழுவும் 6 கேள்விகளும்

இக்குழு வார்டில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று, அங்கு எத்தனை ஓட்டுகள் உள்ளன என கேட்க வேண்டும். அரசு திட்டங்களால் பயன் பெற்றீர்களா, மகளிர் உரிமை தொகை கிடைத்ததா, அரசு இலவச பஸ் பயணத்தை பயன்படுத்துகிறீர்களா உட்பட 6 கேள்விகள் கேட்கின்றனர். அதற்கான பதில்களை ஒரு விண்ணப்பத்தில் எழுதுகின்றனர். அவர்கள் ஆதார் எண், புகைப்படம், அலைபேசி எண் உள்ளிட்ட விபரம் பெற்று 'ஓரணியில் தமிழ்நாடு' செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான ஒரு ஓ.டி.பி., எண் வரும். அதை அந்த விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.இதன் பின் உறுப்பினர்களாக அவர்களை சேர்க்க வேண்டும். அந்த வீட்டில் கட்சி 'ஸ்டிக்கர்' ஒட்ட வேண்டும். இதுபோல் பூத் வாரியாக 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். ஒரு வீட்டிற்கு ஒன்றரை மணிநேரம் ஆகிறது. பல வீடுகளில் இதுபோன்ற தகவல்களை மக்கள் தெரிவிப்பதில்லை. இதனால் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை என்பது சவாலாகவே இருக்கும். குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் கவுன்சிலர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us