Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை அமைவதில் நீடிக்குது சிக்கல்

மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை அமைவதில் நீடிக்குது சிக்கல்

மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை அமைவதில் நீடிக்குது சிக்கல்

மதுரை - துாத்துக்குடி புதிய ரயில் பாதை அமைவதில் நீடிக்குது சிக்கல்

ADDED : ஜூன் 02, 2025 01:05 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்க இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் ரூ.55.16 கோடி ஒதுக்கியும், 'திட்டத்தை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது' எனக் காரணம் காட்டி, நிதியை 'சரண்டர்' செய்வதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், ரயில்வே வாரியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தால் சிக்கல் நீடிக்கிறது.

மதுரையில் இருந்து விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி வழியாக தற்போது துாத்துக்குடிக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 159 கி.மீ., துாரம் கொண்ட இவ்வழித்தடத்தில் இரட்டை ரயில்பாதை, மின்மயமாக்கல் பணிகள் முடிந்து முத்துநகர், துாத்துக்குடி - மைசூரு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மதுரை - துாத்துக்குடி இடையே அருப்புக்கோட்டை வழியாக ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2011-12ல் உருவானது. இத்திட்டத்தில் திருப்பரங்குன்றத்தில் பிரிந்து அருப்புக்கோட்டை, மேலமருதுார் வழியாக மீளவிட்டான் வரை 136 கி.மீ.,க்கு புதிய ரயில் பாதை அமைய உள்ளது.

இதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்தன. முதற்கட்டமாக மீளவிட்டானில் இருந்து மேலமருதுார் வரை 17 கி.மீ., துாரத்திற்கு ரயில் பாதை அமைத்து சோதனையும் நடத்தப்பட்டது. பின் போதிய நிதி ஒதுக்கப்படாதது, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் போன்ற காரணங்களால் இந்தப் பணி முடங்கியது.

இதனால் 2024, டிச., 31ல் நிலம் கையகப்படுத்தும் அலுவலகங்கள் விளாத்திக்குளம், திருப்பரங்குன்றத்தில் மூடப்பட்டன. இதையடுத்து இத்திட்டம் கைவிடப்படுவதாக சர்ச்சைகள் கிளம்பின. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டம் உயிர்ப்புடன் இருப்பதாக விளக்கமளித்தார். இந்நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ.55.16 கோடியும் ஒதுக்கப்பட்டது. எனவே இத்திட்டம் மீண்டும் துவங்கப்படும் என அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

இத்திட்டத்தால் துாத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை, மதுரைக்கு நேரடி இணைப்பு கிடைப்பது மட்டுமின்றி தென்மாவட்டங்களை தொழில் மண்டலமாக உயர்த்த உதவும். இந்நிலையில் இத்திட்டத்தை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறி இதற்கான நிதியை சரண்டர் செய்வதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

இதனால் இத்திட்டம் அமைவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (ரூ.42.70 கோடி), அத்திப்பட்டு - புதுார் (ரூ.42.70 கோடி) ஆகிய திட்டங்கள் கிடப்பில் உள்ளன போன்ற காரணங்களை காட்டி மேற்கண்ட திட்டங்களுக்கான நிதியை சரண்டர் செய்வதாகவும், அதை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



ரூ.200.447 கோடி

சேலம் - கரூர் - திண்டுக்கல் ரூ.100 கோடிஈரோடு - கரூர் ரூ.100 கோடி ஆகிய இரட்டை ரயில் பாதை திட்டங்கள் விரிவான திட்ட அறிக்கை நிலையிலேயே உள்ளன.ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரூ.5.12 கோடிதிட்டத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாமல்லபுரம் வழியாக சென்னை - கடலுார் ரூ.52.13 கோடிஈரோடு - பழநி ரூ.50 கோடி உள்ளிட்ட திட்டங்கள் கைவிடப்படலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us