ADDED : ஜன 11, 2024 03:52 AM
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் துறை உயராய்வு மையம் சார்பில் ரோட்டோர உணவு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், பொருளாளர் ஆழ்வார்சாமி, உதவி செயலாளர் ராஜேந்திரபாபு, உதவி தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். துறை தலைவர் வெங்கடேஸ்வரன் வரவேற்றார்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் ஜெயராம்பாண்டியன் பேசியதாவது: சில ஓட்டல்களில் மீத உணவுகளை குளிர்சாதன பெட்டிகளில் வைத்து மறுநாள் பயன்படுத்துகின்றனர். அதுதான் 'புட் பாய்சன்' ஆகிறது. கொரோனாவிற்கு பின்பு 30 முதல் 50 வயது உள்ளவர்கள் மாரடைப்பு, பக்கவாதத்தால் அதிகளவில் இறக்கின்றனர். காரணம் சரியான உணவு பழக்க வழக்கமின்மை, உடற்பயிற்சியின்மை, துரித உணவுகள், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பது தான்.
இந்தாண்டை சிறுதானிய ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் சிறு தானிய உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். வண்ண வண்ண உணவுகளை சாப்பிட்டால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றார்.
பசுமலை ஸ்டேட் வங்கி முதுநிலை மேலாளர் ஸ்டான்லி ஜோன்ஸ், கடன் பெறும் வழிமுறைகள் குறித்து பேசினார். பேராசிரியர் தேவிகா நன்றி கூறினர்.