Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சங்கேத வார்த்தை மூலம் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டால் குற்றம் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி தகவல்

சங்கேத வார்த்தை மூலம் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டால் குற்றம் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி தகவல்

சங்கேத வார்த்தை மூலம் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டால் குற்றம் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி தகவல்

சங்கேத வார்த்தை மூலம் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டால் குற்றம் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி தகவல்

ADDED : ஜூன் 26, 2025 02:03 AM


Google News
மதுரை: 'கருவிலே குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து சங்கேத வார்த்தை மூலம் தெரியப்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும்,' எனஊரக நலப்பணிகள் துறை இயக்குநர் ராஜமூர்த்தி தெரிவித்தார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக நலப்பணிகள் இயக்ககம் சார்பில் மண்டல அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மதுரை மருத்துவக்கல்லுாரி வளாகத்தில்நேற்று நடந்தது.

இதில், 'கருவுறுதலுக்கு முன், பிறப்பிற்கு முந்தைய கருவின் தன்மையை அறியும் தொழில் நுட்ப முறைகள், பாலினத் தேர்வை தடைசெய்தல் சட்டம் 1994' செயல் திட்டம், விதிமுறைகள் குறித்து, மருத்துவர்கள், மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னதாக மகப்பேறு மருத்துவர்களுக்கான கையேடு, கருவின் தன்மையை அறியும் தொழில்நுட்ப விதிமுறைகள் குறித்த இணையதளத்தை இயக்குநர் ராஜமூர்த்தி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: கருவின் தன்மையை அறியும் தொழில் நுட்ப விதிமுறைகளை மருத்துவர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் அறிந்திருக்க வேண்டும். சென்னை, கோவையில் முன்னதாக நடந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக மதுரை மண்டல அளவிலான பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் கன்னியாகுமரியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

சட்டரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள பயிற்சி முகாம் உதவியாக இருக்கும்.

கருவின் தன்மையை அறிந்து கருவை அழிப்பதற்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆண் குழந்தைகளுக்குநிகராக பெண் குழந்தைகள் இருக்க வேண்டும்.

தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் பெண் விகிதம் மிகவும் குறைந்து காணப்பட்டது.

இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பின் அப்பகுதிகளில் அதிகரித்துள்ளது. சட்டத்தின் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகளை காப்பாற்றுவது.

தருமபுரியில் ஒரு ஸ்கேன் சென்டரை ஆய்வு செய்த போது கடவுள் முருகன், அம்மன் படம் இருந்தது. ஸ்கேன் செய்த பின் வெளியே வரும் போது முருகனை பார்த்தால் ஆண் குழந்தை; அம்மனை பார்த்தால் பெண் குழந்தை என புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற சங்கேத வார்த்தைகள்(கோடு வேர்டு) மூலம் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்தினால் கடுமையான தண்டனை வழங்கப்படும்.ஸ்கேன் சென்டரில் குறியீட்டு படங்கள் வைப்பது சட்டப்படி குற்றமாகும்என்றார்.

மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் அருள் சுந்தரேஷ் குமார், துணை இயக்குநர் (குடும்ப நலம்) நடராஜன், தேசிய மருத்துவ ஆணைய உறுப்பினர் செந்தில், மாவட்ட ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us