ADDED : செப் 12, 2025 05:02 AM

உண்டியல் திருட்டில் 2 பேர் கைது
உசிலம்பட்டி: ஆரியபட்டி கற்குவேல் அய்யனார் கோயிலில் செப்.,7ல் உண்டியல் திருடப்பட்டது. டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் வனிதா, எஸ்.ஐ., சேகர் விசாரித்து அப்பகுதி அஜய் 19, ஸ்ரீநாத்தை 20, கைது செய்தனர். அஜய் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. ஸ்ரீநாத்துடன் சேர்ந்து கோயில் உண்டியதலை திருடியுள்ளார். ஸ்ரீநாத் தனியார் கல்லுாரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 2024ல், குப்பணம்பட்டி கருப்பசாமி கோயில் மணி, ஆரியபட்டி கல்யாணகருப்பு கோயில் உண்டியலையும் திருடியதும் தெரியவந்தது. ஆடம்பரத்திற்காகவும், ஜாலியாக இருக்கவும் திருடி வந்துள்ளனர்.
எமனாக மாறிய வேகத்தடை
மேலுார்: திருவாதவூர் சுந்தர்ராஜ் 68. நேற்று முன்தினம் மாலை கூலி வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றார். அவ்வழியே வந்த அவரது உறவினர் குழந்தைவேல் 50, வீட்டில் இறக்கி விடுவதாக கூறி டூவீலரில் அழைத்துச் சென்றார். திருவாதவூர் மெயின் ரோட்டில் இருந்த வேகத்தடையில் டூவீலர் செல்லும் போது நிலைத் தடுமாறி கீழே விழுந்ததில் சுந்தர்ராஜ் இறந்தார். போலீசார் தினேஷ்குமார் விசாரிக்கிறார்.
சீருடை சிக்கி சிறுமி பலி
வாடிப்பட்டி: குட்லாடம்பட்டி அருவி அருகே உள்ள கரடிகல் பகுதி தென்னை மரம் ஏறும் கூலித்தொழிலாளி கோட்டைச்சாமி. இவரது மூத்த மகள் நவீசா 8, டி.மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 3ம் வகுப்பு படித்தார். நேற்று பள்ளி முடிந்து தனியார் வாடகை வேனில் வந்து வீட்டின் முன் இறங்கினார். அப்போது வேன் கதவை மூடிய நவிசாவின் சீருடை கதவில் சிக்கி உள்ளது. பின் கீழே விழுந்த நவிசா மீது பின் டயர் ஏறி இறங்கியதில் இறந்தார். அதே பகுதி வேன் டிரைவர் பூமிராஜாவை 22, வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.