ADDED : ஜூன் 09, 2025 02:22 AM
லாரி - -டூவீலர் மோதல்: ஒருவர் பலி
உசிலம்பட்டி: தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் அஜய் 24. நேற்று காலை நெசவு தறி ஓட்டும் பணிக்காக தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கு டூவீலரில் சென்றார். குஞ்சாம்பட்டி அருகே பின்னால் வந்த டேங்கர் லாரி மோதியதில் நிலைத் தடுமாறி ரோட்டோரத்தில் நடந்து சென்ற அந்த ஊரைச் சேர்ந்த ராமர் 64, மீது மோதி விழுந்தார். பலத்த காயமடைந்த அஜய் இறந்தார். ராமர் காயமுற்றார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆட்டோ ஓட்டுநர் பலி
நாகமலை: மதுரை ஆரப்பாளையம் மஞ்சமேடு ஆட்டோ டிரைவர் வசந்த் 21. சம்பவத்தன்று மேலக்காலில் விசேஷ வீட்டிற்கு சென்று ஆரப்பாளையம் திரும்பிக் கொண்டிருந்தார். மேலமாத்துார் அருகே மாட்டுத்தாவணியில் இருந்து விக்கிரமங்கலம் சென்ற பஸ் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆட்டோ டிரைவர் போதையில் இருந்தது தெரிந்தது.
நகை பறிப்பு
வாடிப்பட்டி: பரவை பகுதியைச் சேர்ந்தவர் சுபா 35. இவர் திருவாலவாயநல்லுார் பகுதி தனியார் தொழிற்சாலை ஊழியர். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது டூவீலரில் வந்த நபர், சுபா கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துச்சென்றார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியுடன் சுற்றியவர் கைது
சோழவந்தான்: சோழவந்தானில் எஸ்.ஐ., முருகேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஊத்துக்குழியைச் சேர்ந்த முருகன் மகன் தங்கமணி 28, கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தார் . அவரை போலீசார் கைது செய்தனர்.