ADDED : மார் 28, 2025 05:03 AM

ரூ.50 லட்சம் கேட்ட குடும்பம் கைது
மதுரை: ஐராவதநல்லுார் இளம் பெண் ஒருவரை உறவினரான நிலையூர் அஜயன் 27, காதலித்து திருமணம் செய்து கொள்வதாக பழகி ஏமாற்றி கர்ப்பமாக்கினார். திருமணம் செய்ய வேண்டுமானால் ரூ.50 லட்சம் வரதட்சணை தரவேண்டும் என அஜயன் தந்தை ராஜசேகர் 60, மிரட்டல் விடுத்து ஆபாசமாக பேசினார். இதுகுறித்து தெப்பக்குளம் போலீசில் பெண் புகார் அளித்தார். அஜயன், ராஜசேகர், மனைவி விக்டோரியா 57, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
சோழவந்தான்: மேலக்கால் மண்டு கோவில் தெரு கூலித் தொழிலாளி பிச்சை 55. நேற்று காலை அப்பகுதியில் வாழைத் தோட்டத்திற்கு சென்றார். அங்கு அறுந்து கிடந்த மின் ஒயரை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் தாக்கி இறந்தார். காடுபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் 7 பேர் காயம்
வாடிப்பட்டி: தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளாறு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் நேற்று நண்பர்களுடன் பதிவு எண் இல்லாத புதிய காரை ஓட்டிச் சென்றார். மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற போது வாடிப்பட்டி நான்கு வழிச்சாலையில் விராலிப்பட்டி பிரிவில் குறுக்கே வந்த டூவீலர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அதேநேரம் எதிரே வந்த சரக்கு வேனில் கார் மோதியது. காரில் வந்த பெரியகுளம் பகுதி சவுந்தர் 42, சங்கர் 38, சந்தோஷ்குமார் 35, வேல்முருகன் 35, வேனில் வந்த வால்பாறை சிவசுப்பிரமணியன் 42, கற்பகம் 34, சாந்தி 37, காயமடைந்தனர். வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரை அனுப்பப்பட்டனர்.---
அலைபேசி திருடியவர் கைது
மதுரை: மேலுார் இசக்கியம்மாள், திருச்செந்துார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்னை செல்லும் ரயிலில் அதிகாலை 12:15 மணிக்கு மதுரை வந்தார். மதுரையில் இறங்கியவர் பிளாட்பாரத்தில் கைப்பையுடன் துாங்கினார். அதிகாலை 4:00 மணிக்கு விழித்தபோது கைப்பையில் இருந்த அலைபேசி திருடு போனது தெரிந்தது. சி.சி.டி.வி., காட்சி கள் அடிப்படையில் சங்கரன்கோவில் சந்தோசம் 39, என்பவரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.