ADDED : ஜூலை 01, 2025 02:55 AM
மதுரை: மதுரை வடக்கு ஆவணி மூலவீதி அருகே வாகன பார்க்கிங் கட்டுவதற்காக இடிக்கப்பட்ட ஜெயில் காளியம்மன் கோயிலை கட்டித்தர வேண்டும்' என ஹிந்து துறவிகள் பேரவை குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்துள்ளது.
மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் டி.ஆர்.ஓ., அன்பழகன் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சமூக நல துணை கலெக்டர் கார்த்திகாயினி உட்பட பலர் பங்கேற்றனர்.
தமிழக ஹிந்து துறவிகள் பேரவை சார்பில் மாநில அமைப்பாளர் சுடலையானந்த சுவாமி அளித்த மனு: மதுரை வடக்கு ஆவணிமூல வீதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் இருந்த ஜெயில் காளியம்மன் கோயிலை, வாகன பார்க்கிங் அமைப்பதற்காக இடித்துவிட்டனர்.
அதற்கு பதிலாக கோயில் எதையும் கட்டித்தரவில்லை. அங்கிருந்த சிலை, பரிகார தேவதை சிலைகளை ஒரு சந்துப் பகுதியில் போட்டு வைத்துள்ளனர். கலெக்டர் நேரில் ஆய்வு செய்து கோயிலை கட்டித்தர வேண்டும், என தெரிவித்துள்ளார்.
வலைசேரிப்பட்டி சரவணன்மனுவில், ''மேலுார் தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டி முடித்து மூன்றரை மாதங்களாகியும் செயல்படவில்லை. இக்கட்டடம் கட்டியது குறித்த தகவல் பலகை வைக்கவும் இல்லை. இதனால் அரசின் வெளிப்படை தன்மை தெரியவில்லை. கட்டுமான தகவல் பலகை வைக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.
மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் மனு: ஏ.வி.பாலம் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் ஆங்காங்கே முட்புதர்கள், செடிகள் வளர்ந்துள்ளன. இதனை தினமும் பல ஆயிரம் வாகனங்கள் கடக்கின்றன.
செடிகொடிகள் வளர்வதால் விரிசல் ஏற்பட்டு பாலம் அபாயநிலையில் உள்ளது. இதில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுவழி ஏற்பாடு செய்து மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.