/உள்ளூர் செய்திகள்/மதுரை/பன்னீர்செல்வம், தினகரன் தே.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை பன்னீர்செல்வம், தினகரன் தே.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை
பன்னீர்செல்வம், தினகரன் தே.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை
பன்னீர்செல்வம், தினகரன் தே.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை
பன்னீர்செல்வம், தினகரன் தே.ஜ., கூட்டணியில் இருக்க வேண்டும்: அண்ணாமலை
ADDED : செப் 10, 2025 01:45 AM
அவனியாபுரம் : 'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இருவரிடமும் தொலைபேசியில் பேச வாய்ப்பு கிடைக்கும் போது அதைத்தான் சொல்வேன்' என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, த.ம.மு.க., ஜான் பாண்டியன் ஆகியோர் கருத்து பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. பா.ஜ., வைப் பொறுத்தவரை முத்துராமலிங்கத் தேவரை கடவுளாக நினைக்கிறோம். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கும் செல்கிறோம். எங்களை பொறுத்தவரை இதில் எதுவும் சர்ச்சை இல்லை.
கூட்டணி குறித்து கருத்து சொல்லப்பட்டு விட்டது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிவிட்டார். மீண்டும் அதை தோண்ட வேண்டாம். அது அழகல்ல. காலம் கனிந்து வரட்டும் பொறுத்திருங்கள்.
சகோதரர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மதுரையில் மாநாடு நடத்தி இருக்கிறார். அவர் கட்சித் தலைவராக 24 மணி நேரமும் இருக்க வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
த.வெ.க., ஒரு சீரியசான கட்சி என்று சொல்கிறார்கள். அதே வேகத்தை 24 மணி நேரமும் காட்ட வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன். வார நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்கக்கூடிய அரசியல் கட்சிக்கு அழகல்ல.
தி.மு.க., வுக்கு எதிரி என்று த.வெ.க., தங்களை பறைசாற்றினால் அந்த வேகத்தை, களத்தில் காட்ட வேண்டும். த.வெ.க., விற்கு மட்டும் போலீசார் அனுமதி மறுப்பதாக சொல்கிறார்கள். நாங்கள் யாத்திரை நடத்தும் போதும் அனுமதி மறுத்தார்கள். எதிர்க்கட்சிக்கு எதிர்ப்புகள் வரும். அப்படி காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லலாம். ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால் அரை கிலோ மீட்டர் தள்ளி வையுங்கள்; மக்கள் வருவார்கள்.
அ.தி.மு.க., யாத்திரை நடத்துகிறார்கள். பா.ஜ., மண்டல மாநாடு நோக்கி செல்கிறது. நவம்பர், டிசம்பரில் பொதுக்கூட்டங்களில் மக்கள் பங்கேற்கும் போது அரசியல் மாற்றம் தெரியும் என்றார்.
மாவட்டத்தலைவர் மாரிசக்கரவர்த்தி, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் விஷ்ணுபிரசாத் உடனிருந்தனர்.