Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

உலக அமைதிக்காக 'மதுரையில் பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

ADDED : மே 24, 2025 01:46 PM


Google News
Latest Tamil News
மதுரை: மஹாராஷ்டிரா மாநிலம், பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோவில் போன்ற அமைப்பில், நாம சங்கீர்த்தனத்துடன், 'மதுரையில் பண்டரி' நிகழ்வு, 5 நாட்கள் நடக்க இருக்கிறது.

மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தில், இந்த நிகழ்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பகவன் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர் வரவேற்றார். மதுரை ஸ்ரீசக்ர ராஜராஜேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள், அழைப்பிதழின் பிரதியை வெளியிட்டு, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு வழங்கினார்.

தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல புண்ணிய தலங்கள் நாட்டில் உள்ளன. எல்லோரும் எல்லா இடத்திற்கும் சென்று தரிசிக்க முடிவதில்லை. தமிழ்நாட்டில் வசிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் தர, பண்டரிநாதன் இங்கே எழுந்தருள வருகிறார்.

ரிஷிகேஷ், பத்ராச்சலம், அயோத்தி, பூரி, உடுப்பி, துவராகா, மதுரா உட்பட பல தலங்களைத் தொடர்ந்து, 'மதுரையில் பண்டரி' நிகழ்ச்சி, 5 நாட்கள் நடக்கிறது. பகவான் நாம பிரச்சார மண்டலி சார்பில், லட்சுமி சுந்தரம் ஹாலில் இந் நிகழ்வு, மே 28ம் தேதி தொடங்குகிறது.

பண்டரிபுரம், பாண்டுரங்கன் ருக்மணி கோவில் போலவே செட் அமைத்து தினமும் அந்தக் கோயிலில் நடைபெறுவதைப் போலவே பூஜைகள் நடக்க உள்ளன. பண்டரிபுரம் கோவிலில் பூஜை செய்யும் பூஜகர்களே, இங்கும் அதே முறையில் பூஜைகள் செய்ய இருக்கிறார்கள்.

தினமும் பாகவத இசையோடு பகவான் நாம சங்கீர்த்தனமும் நடக்க இருக்கிறது. இதில், நாடு முழுவதும் இருந்து, பிரபலமான 100 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

முதல் நாளில் மகாசண்டி யாகம், மீனாட்சி திருக்கல்யாணம், 108 கன்னியா பூஜை, சுமங்கலி பூஜையோடு விசேஷ சாளக்கிராம பூஜையும் நடக்க இருக்கிறது. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 1008 சாளக்கிராமங்களை வைத்து பூஜை செய்து, அதனை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க இருக்கிறார்கள். வேத பாராயணம், ருத்ர பாராயணம், ஸஹஸ்ரநாம பாராயணங்களும் நடக்க இருக்கிறது.

இந்நிகழ்வில் மருதாநல்லூர் சத்குரு ஸ்ரீ கோதண்டராம சுவாமிகள், பிலாஸ்பூர் ஸ்ரீசச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், விசாகப்பட்டினம் சௌபாக்கிய புவனேஸ்வரி பீடம் ராமானந்த பாரதி மகாசுவாமிகள் கலந்து கொள்கிறார்கள்.

மேலும், இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பல துறவிகள், பாகவதர்கள், பக்தர்கள் பங்கேற்கிறார்கள். தினமும் அன்னதானம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

பகவன் நாம பிரச்சார மண்டலி நிறுவனத் தலைவர் கடலூர் கோபி பாகவதர், பொருளாளர் விஸ்வநாதன், கமிட்டி உறுப்பினர்கள் விஜயகுமார், வைத்தியநாதன், ஸ்ரீ சக்கர ராஜராஜேஸ்வரி பீடம் பரத், பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us