/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வாய்ப்பில்லை தலைவரே: தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு வாய்ப்பில்லை தலைவரே: தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு
வாய்ப்பில்லை தலைவரே: தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு
வாய்ப்பில்லை தலைவரே: தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு
வாய்ப்பில்லை தலைவரே: தி.மு.க.,வில் 30 சதவீதம் புதிய உறுப்பினர் சேர்க்கை இலக்கு
ADDED : ஜூன் 12, 2025 02:23 AM

மதுரை: மதுரையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் (மா.செ.,) மீதுள்ள அதிருப்தியால் 'முதல்வர் ஸ்டாலினின் உத்தரவான 30 சதவீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் ஆர்வம் காட்டப் போவதில்லை என வட்டச் செயலாளர்கள் (வ.செ.,) போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
வரும் சட்டசபை தேர்தலையொட்டி மாநில அளவில் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி மதுரையில் வட்டச் செயலாளர்களுக்கு புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் உத்தரவுபடி ஜூன் 15 முதல் இதற்கான பணிகளை துவக்க மாவட்ட செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் அதற்கான களப்பணிகளுக்கு ஏற்படும் செலவுத் தொகை வழங்குவதில் மா.செ.,க்கள் கையை சுருக்கிக்கொண்டனர். பல வ.செ.,க்களின் மனைவிகள் உள்ளாட்சிகளில் பதவிகளில் உள்ளனர். அவர்கள் தவிர பிறருக்கு உறுப்பினர் சேர்க்கையின்போது ஏற்படும் செலவை சந்திப்பது சவாலாக உள்ளது. இதுகுறித்து மா.செ.,க்களிடம் முறையிட்டும் எந்த முன்னேற்றம் இல்லை என்பதால், உறுப்பினர்கள் சேர்க்கையில் ஆர்வம் காட்டப்போவதில்லை என முடிவு எடுத்துள்ளனர்.
வ.செ.,க்கள் கூறியதாவது: கட்சி கூட்டங்கள், முதல்வர், அமைச்சர்கள் விழாவிற்கு ஆட்களை அழைத்து வர எங்களைதான் பயன்படுத்துகின்றனர். வ.செ.,க்கள் பலர் கட்சிக்காக உழைத்தாலும் 'பசை' உள்ளவர்கள் தான் பதவிக்கு வரமுடிகிறது. கட்சியின் பல பதவிகளை ஒரு குடும்பத்திற்கே மா.செ.,க்கள் வாரி வழங்கியுள்ளனர். மனைவி கவுன்சிலராக உள்ள வ.செ.,க்களுக்கு வருவாய் பிரச்னையில்லை. ஆனால் மற்றவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
வார்டில் 30 சதவீதம் உறுப்பினர் சேர்க்க, ஒவ்வொருவரின் பெயர், அப்பா பெயர், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, அலைபேசி எண் சேகரிக்க வேண்டும். ஒரு வார்டில் 15 ஆயிரம் பேர் உள்ளனர் என்றால் 4,500 பேருக்கு நகல் எடுத்தால் எவ்வளவு செலவாவது. மா.செ.,க்கள் எங்களை 'கண்டுகொள்ளவில்லை' என்றால் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டாமல் நாங்களும் அவர்களை 'டீலில்' விடும் திட்டத்தில் உள்ளோம். இதனால் முதல்வர் உத்தரவிட்ட இலக்கை எட்ட வாய்ப்பின்றி போகும். இதற்காக வ.செ.,க்களுக்கு நெருக்கடி கொடுத்தால் கட்சி மாறிச்செல்லவும் தயாராக உள்ளோம் என்றனர்.