Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரை- சினிமா

மதுரை- சினிமா

மதுரை- சினிமா

மதுரை- சினிமா

ADDED : ஜூன் 25, 2025 03:35 AM


Google News
'தக் லைப்' : மன்னிப்பு கேட்ட மணிரத்னம்

38 ஆண்டுகளுக்கு பின் கமல், மணிரத்னம் கூட்டணியில் வெளியான 'தக் லைப்' படம் தோல்வியை தழுவியது. மணிரத்னம் கூறுகையில் ''எங்கள் கூட்டணியில் வெளியான நாயகன் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. 'தக் லைப்' படத்தையும் அப்படியே எதிர்பார்த்தனர். நாயகன் பாணி இல்லாமல் வேறு ஒரு படத்தை கொடுக்கவே திட்டமிட்டோம். அது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டது. நாயகனை கருத்தில் கொள்ளாமல் 'தக் லைப்'பை பார்த்திருந்தால் ரசிகர்களுக்கு பிடித்திருக்கும். எனினும் அவர்கள் விரும்பும் படத்தை கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறேன்'' என்றார்.

ஜூன் 27ல் 4 படங்கள் ரிலீஸ்

2025ம் ஆண்டின் அரையாண்டு முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜூன் 27ல் விக்ரம் பிரபு நடித்த 'லவ் மேரேஜ்', விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்', திருக்குறளையும், திருவள்ளுவரையும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட 'திருக்குறள்' மற்றும் 'குட் டே' ஆகிய படங்கள் வெளியாகின்றன.

டொவினோ தாமஸிற்கு ஜோடியான கயாடு லோஹர்

'டிராகன்' படம் மூலம் பிரபலமான நடிகை கயாடு லோஹர் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் இரு படங்களில் நடித்துள்ள இவர் அடுத்து 'பள்ளிச்சட்டம்பி' என்ற படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் ஜோடியாக இணைந்துள்ளார். இதை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்குகிறார். ஆக் ஷன் கலந்த திரில்லர் கதையில் இப்படம் உருவாகிறது.

மீண்டும் ரீமேக் விவாதத்தில் 'ஜனநாயகன்'

வினோத் இயக்கத்தில் உருவாகும் நடிகர் விஜயின் கடைசி படமான 'ஜனநாயகன்' ஜன., 9ல் ரிலீசாகிறது. தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என சொல்லப்பட்டாலும் படக்குழு உறுதிப்படுத்தவில்லை. மாறாக அப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி இதில் இடம்பெறும் என்றனர். இந்நிலையில் விஜய் பிறந்தநாளில் வெளியான டீசரில் விஜய் போலீஸ் உடையில் வருவது, கையில் டாட்டூ போன்றவை பகவந்த் கேசரி படத்தின் காட்சிகள் போன்றிருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் ரீமேக் விவாதத்தில் 'ஜனநாயகன்' படம் சிக்கி உள்ளது.

அஜித் படமா ஸ்ரீ கணேஷ் விளக்கம்

'எட்டு தோட்டாக்கள்' பட புகழ் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தற்போது சித்தார்த் நடிப்பில் '3 பிஎச்கே' படத்தை இயக்கி உள்ளார். ஜூலை 4ல் ரிலீசாகிறது. அடுத்து அஜித் படத்தை இயக்குவதாக செய்தி வெளியாக அதற்கு ஸ்ரீ கணேஷ் ''அஜித் பெரிய நடிகர். அவர் படத்தை இயக்கும் அளவிற்கு நானும் வளர வேண்டும். நிறைய தரமான படங்களை இயக்கி என் தகுதியை வளர்த்து பின்னர் அஜித்தை சந்தித்து கதை சொல்லி படம் இயக்குவேன்'' என்கிறார்.

'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்

90களில் அனைவரையும் கவர்ந்த சூப்பர் ஹீரோ 'டிவி' தொடர் 'சக்திமான்'. இந்த வேடத்தில் முகேஷ் கண்ணா நடித்தார். இதை படமாக உருவாக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வந்தது. மலையாள நடிகரும், இயக்குனருமான பசில் ஜோசப் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின் எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில் சக்திமானாக அல்லு அர்ஜூன் நடிப்பதாக தகவல் பரவியது. இதை மறுத்துள்ள பசில் ஜோசப், ''ரன்வீர் சிங் நடிப்பில் மட்டுமே 'சக்திமான்' உருவாகும். இது தொடர்பாக வதந்திகளை பரப்புபவர்கள் நிச்சயமாக அவர்களின் சுயலாபத்துக்காக செய்கிறார்கள்'' என்றார்.

ஆக் ஷன் ஹீரோக்கள் மீது அதிகரித்த மரியாதை : கஜோல்

நடிகை கஜோல் பாலிவுட்டில் நடித்துள்ள திகில் கலந்த புராண படமான 'மா', ஜூன் 27ல் ரிலீஸாகிறது. முதன்முறையாக ஆக் ஷன் ரோலில் நடித்துள்ள இவர் அதுபற்றி கூறும்போது, ''இந்த படம் முழுக்கவே எனக்கு சவால் இருந்தது. குறிப்பாக ஆக் ஷன் காட்சிகள் அதிக சவாலாக அமைந்தன. காரணம் என் சினிமா பயணத்தில் முதன்முறையாக ஆக் ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். முன்பெல்லாம் ஆக் ஷன் காட்சிகளில் என்ன இருக்கிறது என நினைத்தது உண்டு. அதை நான் செய்யும் போது தான் அதில் உள்ள சிரமங்களை உணர்ந்தேன். இப்போது எல்லா ஆக் ஷன் ஹீரோக்கள் மீது, குறிப்பாக எனது கணவர் அஜய் தேவ்கன் மீது எனது மரியாதை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில், அவர் பல ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளார்'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us