/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல் நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
நீர்வளங்களை ஒழுங்குபடுத்த சட்டம் உயர்நீதிமன்றத்தில் தகவல்
ADDED : ஜூன் 29, 2025 05:02 AM
மதுரை: மழை நீர் சேமிப்புத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த தாக்கலான வழக்கில்,'மாநிலத்தின் நீர்வளங்களை ஒழுங்குபடுத்துதல், மேலாண்மை மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இம்மசோதா அரசின் பரிசீலனையில் உள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்துவதும் அடங்கும்,' என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது.
மதுரை சதீஷ்குமார் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழை நீர் சேமிப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன்படி கட்டடங்களில் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்த வேண்டும். இதை நிறைவேற்றத் தவறிய கட்டடங்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்தன.
தற்போது திட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகளவு மழை பெய்தும், முறையாக சேமிக்கவில்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
மழை நீர் சேமிப்புத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த, முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க தமிழக தலைமைச் செயலர், நகராட்சி நிர்வாக கமிஷனர், நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபர குறிப்பு மையம் தலைமைப் பொறியாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விபர குறிப்பு மையம் தலைமைப் பொறியாளர் தாக்கல் செய்த பதில் மனு:
நிலத்தடி நீர் சட்டத்தை அமல்படுத்தும் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட அனுபவங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மாநில திட்டக் குழுவின் பரிந்துரைகள், துறைகளின் கருத்துக்கள், சட்டத்துறையின் மதிப்பீடு அடிப்படையில் மாநிலத்தின் நீர்வளங்களை ஒழுங்குபடுத்துதல், மேலாண்மை செய்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாக சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இம்மசோதா அரசின் பரிசீலனையில் உள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு முறையை செயல்படுத்துவதும் அடங்கும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மழைநீர் சேகரிப்பிற்கான அரசின் திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. இவ்வழக்கில் கோரிய நிவாரணத்தை பரிசீலிக்கத் தேவையில்லை. விதிமீறல் ஏதேனும் இருந்தால், சட்டப்படி தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மனுதாரர் அணுக உரிமை உண்டு. வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.