/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக : சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக :
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக :
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக :
சந்தேகமா... டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக :
ADDED : ஜூன் 07, 2025 10:55 PM
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியமா. சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு எளிதாக வருவது எதனால்.
-- -தேவிப்ரியா, மதுரை
சர்க்கரை நோயாளிகள் ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்வது அவசியம். கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையினால் ஏற்படக்கூடிய கண் விழித்திரை நரம்புகள் பாதிப்பின் ஆரம்ப நிலையில் அறிகுறிகளோ, பிரச்னையோ ஏற்படுத்தாது. ஆரம்ப நிலையில் இந்த பாதிப்பை கண்டறிந்தால் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு, சில மருந்துகள் மற்றும் லேசர் சிகிச்சையின் மூலம் கண் பார்வை இழப்பை தவிர்க்க முடியும்.
நீண்டகாலமாக ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லையென்றால் சிறுநீரகத்தில் புரதம் கசியத் தொடங்குகிறது. இந்த நிலையில் ரத்த சர்க்கரை மற்றும் ரத்தஅழுத்த கட்டுப்பாடு, சில பாதுகாப்பு மருந்துகள் உட்கொள்ளவில்லை எனில் பாதிப்பு தீவிரமாகி சிறுநீரகத்தை பாதிக்கின்றது.
மேலும் உடல் வலி, காய்ச்சலுக்கு பயன்படுத்தக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகளும் ஊசிகளும் சிறுநீரக பாதிப்பை அதிகரிக்கக்கூடும். ஆண்டுக்கு ஒருமுறை மேற்கொள்ள வேண்டிய முழு உடல் பரிசோதனையின் போது 'மைக்ரோ ஆல்புமின் யூரியா' எனப்படும் சிறப்பு சிறுநீரக பரிசோதனை மேற்கொண்டு சிறுநீரக நிலையை அறிந்து கொள்ளுதல் அவசியம்.
- டாக்டர் சி.பி. ராஜ்குமார் சர்க்கரை நோய், பொது நல மருத்துவ நிபுணர் தேனி
எனக்கு வயது 35. சோதனையில் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தது. இந் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன
- கனகராஜ், நத்தம்
கணையத்தில் இன்சுலின் சுரப்பது குறைவாக இருந்தாலோ, இரைப்பையில் குறைபாடு இருந்தாலோ நீரிழிவு நோய் ஏற்படும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். குழந்தை பருவத்தில் வரும் நீரிழிவு நோயை வகை 1 என்றும், பரம்பரை மற்றும் மரபணு, வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் நீரிழிவு நோயை வகை 2 எனவும் கூறுகிறோம். இந்தியாவில் 10 கோடி மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதில் 13 கோடி மக்கள் ஆரம்ப கட்ட பாதிப்பில் உள்ளனர். நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு தானாக எடை குறையும், அடிக்கடி சிறுநீர் போகும், அதீத தாகம், உடல் சோர்வு, பார்வை மங்குதல், காயங்கள் ஆற அதிக நாட்கள் ஆவது உள்ளிட்டவை நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள்.
நீரிழிவு நோயாளிகள் கசப்பு மற்றும் துவர்ப்பு நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும். வாழைக்காய், சுரைக்காய், வெண்டைக்காய், பீர்க்கங்காய், கொத்தவரங்காய் தொடர்ந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு உள்ளது.
- டாக்டர் ரவிஅரசு பொதுநல மருத்துவர் (ஓய்வு) கோபால்பட்டி
இரண்டரை வயது மகனின் உடலில் சிறு சிறு கொப்பளங்கள் தோன்றுகிறது. சில நாட்களில் அது புண்ணாக மாறி வேதனைப்படுத்துகிறது. இதனை எவ்வாறு தடுப்பது.
- பத்மா, தேனி
குழந்தைகள் மண்ணில் விளையாடுவது, சரியாக குளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால் இந்த தோல் அலர்ஜி போன்ற சிவப்பு நிற கொப்பளங்கள் ஏற்படுகிறது. இது ஒரு வகையான அலர்ஜி ஆகும். இந்த அலர்ஜி கை, கால்கள், தலைப்பகுதியில் தென்படும். இந்த கொப்பளங்கள் ஏற்படாமல் தடுக்க சுகாதாரமான முறைகளை பின்பற்றுதல், நல்ல உணவுகள் எடுத்துக்கொள்வது, மண்ணில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். கொப்பளங்கள் உடைந்து வெளியேறும் தண்ணீரால்மேலும் கொப்பளங்கள் அதிகரிக்கும். உடைந்த கொப்பளங்கள் புண்ணாக மாறும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
- டாக்டர் சிவகுமரன்உதவி நிலைய மருத்துவ அலுவலர்அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தேனி
--------எனது ஆறு மாத குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்படுகிறது. இதற்கான தீர்வு என்ன
- மலர்விழி, ராமநாதபுரம்
பொதுவாக குழந்தைகள் வளரும் வயதில் கீழே கிடக்கும் பொருட்களை எடுத்து உண்பார்கள். இதன் காரணமாக வயிற்று போக்கு, வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. உணவு செரிமான பிரச்னை இருந்தாலும் இது போன்று வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட வாய்ப்புள்ளது. பாதிப்பு ஏற்பட்டவுடன் டாக்டரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும். கை வைத்தியம் என்ற பெயரில் ஏதும் செய்யக்கூடாது. இது போன்ற சமயத்தில் குழந்தைகளுக்கு வலிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. தாய்ப்பால் செரிமானம் ஆகாவிட்டாலும் வாந்தி ஏற்படும். தாய்ப்பால் புகட்டுவதில் 2 மணி நேரம் இடைவெளி தரவேண்டும். குழந்தைகள் அழுகிறது என்பதற்காக தொடர்ந்து தாய்ப்பால் புகட்டக்கூடாது. வயிற்றுப்போக்கு அதிகமானால் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கொடுக்க வேண்டும். குழந்தைகளின் உடலில் நீர் சத்து குறைவை இது சரி செய்யும். வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களின் ஆலோசனை பெற வேண்டும்.
- டாக்டர் செய்யது பைசல்பொது சிகிச்சை நிபுணர் ராமநாதபுரம்
ஈறுகளில் ரத்தக் கசிவு எதனால் வருகிறது.
- அ.அரவிந்த்,சிவகங்கை
ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு ஆரோக்கியமற்ற அல்லது நோயுற்ற ஈறுகளுக்கான அறிகுறி. இதற்கான காரணங்களை சரி செய்ய வேண்டும், பற்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். பற்கள் துலக்கும் போதோ அல்லது பல் இடுக்கை சுத்தம் செய்யும் போதோ ரத்தக்கசிவு ஏற்படலாம். ஈறுகள் வீக்கம் கடுமையாகும் போதும் அதன் கீழ் தாடை எலும்புகள் வரை செல்லும்போதும் ரத்தக் கசிவு அதிகமாகும். ஈறுகள் மற்றும் பற்கள் சந்திக்கும் இடங்களில் பிளேக் உருவாவதினால் நோய்தொற்று ஏற்படும். பிரசவ காலத்தின் போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கூட ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே குறைபாடு. நீரிழிவு நோயாலும் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படலாம். ஆகையால் ரத்தக் கசிவு அடிக்கடி ஏற்பட்டால் முதலில் பல் டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- டாக்டர் ஜெ.விஜயபாரத்அரசு மருத்துவர் தாலுகா மருத்துவமனைகாளையார்கோவில்
எனது குழந்தைக்கு ஐந்து வயது ஆகிறது. சிறிய கால நிலை மாற்றம் ஏற்பட்டாலும் உடனடியாக சளி பிடித்து விடுகிறது. இதனை தடுப்பதற்கு என்ன செய்யலாம்.
- -கர்ணன், சிவகாசி
காலநிலை மாற்றம் எப்போது ஏற்பட்டாலும் சளி பிடிப்பது இயல்புதான். கொதிக்க வைத்த தண்ணீரை ஆறவைத்து குடிக்க வேண்டும். சித்த மருத்துவத்தில் ஆடாதொடா டானிக், இருமல், சளிக்கு பால சஞ்சீவி மாத்திரை கொடுக்கலாம். கிராம்பு, சித்தரத்தை, ஏலக்காய், கற்பூரவள்ளி இலை, துளசி, துாதுவளை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இது சளி பிடிக்காமல் தடுப்பதற்கு உதவும்.
- -டாக்டர் மணிமேகலைசித்தா மருத்துவர்அரசு மருத்துவமனைசிவகாசி