Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சட்டவிரோத சங்கங்களின் பதிவு ரத்து;  உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத சங்கங்களின் பதிவு ரத்து;  உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத சங்கங்களின் பதிவு ரத்து;  உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத சங்கங்களின் பதிவு ரத்து;  உயர்நீதிமன்றம் உத்தரவு

ADDED : ஜூன் 15, 2025 12:00 AM


Google News
மதுரை : பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் தொடர்பாக பதிவுத் துறையால் ஆய்வுகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், பதிவை ரத்து செய்ய அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். மனகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல் நடந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

அறந்தாங்கி ஷாபிக் யாசிர் தாக்கல் செய்த மனு:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மனமகிழ் மன்றம் (ரெக்ரியேஷன் கிளப்) என்ற பெயரில் மதுபானக் கடை நடத்தப்படுகிறது. உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பாருடன் இணைந்த டாஸ்மாக் கடைக்கு எதிரே அமைந்துள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கிளப்பிற்கு எதிராக போராட்டம் நடந்தது. கிளப்பை தடை செய்யக்கோரி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், கலெக்டர், மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

சங்க பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் விதிமீறல்கள் குறித்து விசாரிக்க பதிவாளருக்கு அதிகாரம் உண்டு. எந்தவொரு சங்கமும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் அதன் பதிவை ஏன் ரத்து செய்யக்கூடாது என நோட்டீஸ் அனுப்பலாம். சங்கத்தின் விளக்கத்தை பரிசீலிக்கலாம். பதிவை ரத்து செய்யலாம்.

தமிழகம் முழுவதும் பல சங்கங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் காணப்பட்டாலும், பதிவுத்துறை அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்வதில்லை அல்லது பதிவை ரத்து செய்வதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என பொதுவான கருத்து நிலவுகிறது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் தொடர்பாக பதிவுத் துறையால் ஆய்வுகள் மேற்கொள்வதை உறுதிசெய்ய வேண்டும். அவற்றின் பதிவுகள், ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், பதிவை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். பதிவு ரத்து செய்யப்பட்டதும், அத்தகைய சட்டவிரோத சங்கங்கள் மீண்டும் திறக்கப்படாமல் இருப்பதை போலீஸ் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி டி.ஜி.பி.,அனைத்து போலீசாருக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டார். அதில்,'குறிப்பிட்ட கிளப்கள், சங்கங்கள் மீது வழக்கு பதிவு செய்தது குறித்து சங்கங்களின் பதிவு சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட சங்கத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட மாவட்ட பதிவாளருக்கு அதன் நகலை அனுப்ப வேண்டும்,' என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவை ரத்து செய்ய பதிவாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பார் அல்லது வேறு எந்த உரிமத்தையும் ரத்து செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை நடவடிக்கை எடுக்கலாம்.

இத்தகைய கிளப்களின் செயல்பாடுகளை கண்காணிக்க போலீஸ் அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர். மக்களுக்கு இடையூறு ஏற்படும்போது போலீசார் விழிப்புடன் இருக்க வேண்டும். இதுபோன்ற இடையூறு அல்லது சட்டவிரோத செயல் நடந்தால் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.மக்களிடமிருந்து வரும் இதுபோன்ற புகார்கள் மீது தாமதமின்றி தீர்வு காண வேண்டும். கடமை தவறுதல், அலட்சியம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புதுக்கோட்டை எஸ்.பி.,தனது கீழ்நிலை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றத்தை ஆய்வு செய்ய வேண்டும். டி.ஜி.பி.,யின் சுற்றறிக்கையை பின்பற்ற வேண்டும்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை, பதிவுத்துறை மற்றும் பிற தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us