Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகார்கள் எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகார்கள் எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகார்கள் எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி

லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்த புகார்கள் எவ்வளவு உயர்நீதிமன்றம் கேள்வி

ADDED : மார் 26, 2025 03:49 AM


Google News
மதுரை : கடந்த 5 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை விபரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே அதிகாரிபட்டி மலர் செல்வி தாக்கல் செய்த மனு: எனது கணவர் 2022 ல் இறந்தார். திருப்பூரில் வேலை செய்தேன்.போலி பட்டாக்களை உருவாக்கி மோசடி பத்திரங்கள் மூலம் எங்களின் சில பூர்வீகச் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன. இதை ரத்து செய்ய சட்டப்பூர்வ வாரிசு சான்றுகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகினேன். பேரையூர் தாசில்தார், எழுமலை சார்பதிவாளர், அதிகாரிபட்டி வருவாய் ஆய்வாளருக்கு வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிபட்டி வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டார். அவரிடம் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்தை பல்வேறு தேதிகளில் வழங்கினேன். அவரது மனைவியின் வங்கி கணக்கிற்கு ஜிபே மூலம் ரூ.45 ஆயிரம் செலுத்தினோம். மேலும் பணம் கேட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறை தென்மண்டல எஸ்.பி., மதுரை டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: மனுதாரர் 2024 ல் அனுப்பிய புகாரை வருவாய்த்துறைக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரைத்தது. அது 8 மாதங்களாக கண்டுகொள்ளப்படவில்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர்: ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்க சம்பந்தப்பட்ட துறையின் முறையான அனுமதி தேவை. அதன்படி மனுதாரரின் புகார் மதுரை கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பேரையூர் தாசில்தார் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. லஞ்சம் பெற்றதற்கு முகாந்திரம் இருப்பதால் வி.ஏ.ஓ.,விற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை துவக்கப்பட்டது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: ஜி-பே மூலம் பணம் செலுத்தியது, தனக்கும் வி.ஏ.ஓ.,விற்கும் நடந்த 'வாட்ஸ் ஆப் ஆடியோ' உரையாடல் விபரங்களை புகாரில் மனுதாரர் அளித்துள்ளார். புகாருடன் தங்களுக்கு எந்த ஆவணமும் வரவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை மறுத்துள்ளது. புகாரின் உண்மைத் தன்மையை அறிய ஏதேனும் ஆவணங்கள் தேவைப்பட்டால், மனுதாரரிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்திருக்க வேண்டும். மாறாக கலெக்டருக்கு புகாரை பரிந்துரைத்ததால், 8 மாதங்களாக சரியாக விசாரிக்கவில்லை.

இந்நீதிமன்றம் 2024 அக்.21 ல் உத்தரவிட்டதன் மூலம் விசாரணை நடத்த தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். பேரையூர் தாசில்தார் மீதும் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால், கலெக்டரின் உத்தரவின் பேரில் தாசில்தார் விசாரித்து ஆர்.டி.ஓ.,விடம் அறிக்கை அளித்துள்ளார். தற்போது வி.ஏ.ஓ.,விற்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாகக்கூறி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனும் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறுவது சாத்தியமல்ல. ஏழைகள், குரலற்றவர்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.

சம்பந்தப்பட்ட துறையிடம் முறையான அனுமதி பெற்ற பின்னரே, எந்தவொரு புகாரின் மீதும் விசாரணை நடத்தப்படும் என்ற அரசு தரப்பின் வாதத்தை இந்நீதிமன்றம் ஏற்க முடியாது. ஒப்புதல் வழங்க துறைக்கு கால வரம்பு உள்ளது. ஆனால் அனைத்து துறைகளும் 3 மாதங்களுக்குள் அனுமதி வழங்குவதில்லை. இவ்வழக்கில் புகாரிலுள்ள குற்றச்சாட்டு விசாரணைக்கு உகந்ததாக உள்ளது. ஆனால் புகாரை பரிசீலிக்காமல், இயந்திரத்தனமாக கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

'ஒவ்வொரு நாளும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஆயிரக்கணக்கான புகார்கள் வருகின்றன. அனைத்து புகார்களையும் விசாரிப்பது சாத்திமற்றது,' என அரசு தரப்பு கூறுகிறது. ஊழல் புகார்களை கையாள லஞ்ச ஒழிப்புத்துறைக்கு போதிய வசதி இல்லை என்பதை இந்நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. மாநிலத்தில் 14.5 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இருப்பினும் லஞ்ச ஒழிப்புத்துறையில் 200 அல்லது 300 அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இருக்கும் அதிகாரிகளைக் கொண்டு ஊழல் அச்சுறுத்தலை எப்படி கையாளப்போகிறது என தெரியவில்லை. வரும் புகார்களை, அவற்றின் தன்மையைக்கூட பார்க்காமல், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், லஞ்ச ஒழிப்புத்துறை தபால் அலுவலகமாக செயல்பட முடியாது. ஊழல் புற்றுநோயைப் போன்றது; அது சமூகத்தை பாதிக்கிறது. விரைவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாவிடில் அது ஒட்டுமொத்த அரசு அமைப்பையே சீர்குலைத்துவிடும்.

மாநில அரசுத்துறைகளில் உள்ள ஊழியர்களின் தற்போதைய எண்ணிக்கை, லஞ்ச ஒழிப்புத்துறையிலுள்ள அதிகாரிகள், பணியாளர்களின் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் மாதம் வாரியாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை, நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி பெற சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிய புகார்களின் எண்ணிக்கை, அவற்றில் இதுவரை எத்தனை அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன; 5 ஆண்டுகளாக 4 மாதங்களுக்கும் மேல் நிலுவையிலுள்ள புகார்கள் எண்ணிக்கை, மற்ற புகார்களின் நிலை, லஞ்ச ஒழிப்புத்துறையில் தற்போதுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை புகார்களை கையாள்வதற்கு போதுமானதா, ஆம் எனில் பிரச்னையை கையாள்வதற்கான வழிமுறை என்ன, இல்லை எனில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கை விபரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அறிக்கையாக மார்ச் 28 ல் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us