/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 'நெல் கொள்முதல் எப்போது ஆபீசர்ஸ்' மையத்தில் காத்திருக்கும் விவசாயிகள் 'நெல் கொள்முதல் எப்போது ஆபீசர்ஸ்' மையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்
'நெல் கொள்முதல் எப்போது ஆபீசர்ஸ்' மையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்
'நெல் கொள்முதல் எப்போது ஆபீசர்ஸ்' மையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்
'நெல் கொள்முதல் எப்போது ஆபீசர்ஸ்' மையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்
ADDED : ஜூன் 20, 2025 03:32 AM

மேலுார்: இ.மலம்பட்டியில் கொள்முதல் மையத்தில் நெல்லை சேமித்து வைத்து ஐந்து நாட்கள் ஆகியும் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலுார் அருகே சேண்டலை பட்டி, கொங்கம்பட்டி, கீழவளவு கிராமங்களில் அறுவடை செய்த நெல்லை இ. மலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்வது வழக்கம். எனவே இந்தாண்டும் வேளாண் துறை மூலம் உயரதிகாரிகளை நேரில் சந்தித்து கொள்முதல் நிலையம் துவங்க விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அதிகாரிகள் உறுதி அளித்ததால் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடைகளை இ.மலம்பட்டியில் குவித்து வைத்தனர். அன்று முதல் நெல் கொள்முதலை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கூட்டுறவுக் கடன் வாங்கி ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் செலவு நெல்சாகுபடி செய்துள்ளோம். அறுவடை செய்து கொள்முதல் செய்யும் இடத்தில் குவித்து வைத்து 5 நாட்களுக்கும் மேலாகிறது. இதுவரை கொள்முதல் செய்யாததால் நெல் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாவதோடு எடையும் குறைகிறது. கால்நடைகளிடமிருந்து நெல்லை பாதுகாக்க இரவு பகலாக காத்துக் கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
நெல் கொள்முதல் நடக்காததால் கடன்களை திருப்பி செலுத்த முடியவில்லை. கொள்முதல் செய்யும் இடத்தில் இடமில்லாததால் சில விவசாயிகள் விளைந்த நெல்லை அறுவடை செய்யாமல் உள்ளனர். காலம் கடந்து அறுவடை செய்தால் அரிசி குருணையாக உடையும் அவலம் உள்ளது. எங்கள் நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உடனே கொள்முதல் நடவடிக்கையை துவங்க வேண்டும் என்றனர்.
நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகர் கூறுகையில், ''விரைவில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்றார்.