/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அறிவிக்க வேண்டும் எதிர்பார்ப்பு கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அறிவிக்க வேண்டும் எதிர்பார்ப்பு
கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அறிவிக்க வேண்டும் எதிர்பார்ப்பு
கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அறிவிக்க வேண்டும் எதிர்பார்ப்பு
கூட்டுறவு ஊழியர்களின் ஓய்வு வயதை 62 ஆக அறிவிக்க வேண்டும் எதிர்பார்ப்பு
ADDED : செப் 13, 2025 05:35 AM
மதுரை: ஓய்வூதிய திட்டம் இல்லாத கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு பணி ஓய்வு வயதை 62 ஆக அதிகரிக்க வேண்டும் என கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்கத்தினர் கூட்டுறவுத்துறை செயலர் சத்யபிரதா சாகுவிடம் கோரிக்கை வைத்தனர்.
தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடாசலபதி, மாநில நிர்வாகிகள் மணி, தரணி, கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டுறவுத்துறை செயலரை நேற்று சந்தித்தனர். இதுகுறித்து வெங்கடாசலபதி கூறியதாவது:
2022 - 23, 2023 - 24 ம் ஆண்டுகளுக்கான ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டிய ரூ.ஆயிரம் கோடி மானியத்தில் ரூ.501 கோடியை அரசு தரவில்லை. இத்தொகையை தீபாவளிக்கு முன்பாக வழங்கினால் ஊழியர்களின் சம்பள நிலுவை, போனஸ், பண்டிகை முன்பணம் தருவதற்கு உதவியாக இருக்கும்.
தொடக்க கூட்டுறவு பண்டகசாலை அலுவலகங்கள், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம், ஊதிய உயர்வு அளித்து ஐந்தாண்டுகள் நிறைவடைந்ததால் ஊதிய உயர்வு தொடர்பாக குழு அமைக்க வேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்கள், பெறாதவர்களுக்கு ஒரே மாதிரியான பணி ஓய்வு வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறாதவர்கள் 60 வயதில் பணிஓய்வு பெறும் போது அவர்களுக்கான எந்த பணப்பலனும் கிடைக்காது என்பதால் அவர்களது ஓய்வு வயதை 62 ஆக அதிகரிக்க வேண்டும். இதற்காக கூட்டுறவு பண்டகசாலைகளின் துணைவிதிகளில் திருத்தம் மேற்கொள்ள பதிவாளர் அனுமதி வழங்க வேண்டும்.
தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகளில் அலுவலகப் பணியாளர்களே இல்லை.
விற்பனையாளர்களுக்கு துணைவிதியின் கீழ் பதவி உயர்வு தரவில்லை. மாறாக பொறுப்பு என்ற அடிப்படையில் கீழ்நிலை பதவி விற்பனையாளர்கள், மேல்நிலை பதவி மேலாளர் பொறுப்பு வகிக்கின்றனர்.
பத்தாண்டுக்கு முன்பாக இருந்த கட்டுப்பாடற்ற பொருள் கொள்முதல் பாலிசி, காலிச்சாக்கு விற்பனை முறையை மாற்றியதால் கூட்டுறவு பண்டகசாலைகள் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு விற்பனையாளர்கள் நேரடியாக வழங்குவதற்கான செலவு, ஊக்கத்தொகையை மாதந்தோறும் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.