Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்

கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்

கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்

கீழக்கரை ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை பராமரிப்பதில் 'மல்லுக்கட்டு'; வாடகைக்கு விடும் புதிய திட்டத்தால் சமாளிக்கலாம்

ADDED : ஜூன் 17, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் கடந்தாண்டு ஜனவரியில் ரூ.63 கோடியில் கட்டப்பட்ட அலங்காநல்லுார் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் பார்வையாளர்களால் கழிப்பறை, குடிநீர் குழாய்கள், தடுப்பு வேலிகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. வருவாய் இன்றி பராமரிப்பதும் சிரமமாக உள்ளது.

இம்மைதானத்தில் தான் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் மதுரையின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டிகள் அந்தந்த கிராம பாரம்பரிய வாடிவாசல்களில் தான் தொடர்ந்து நடத்தப்படுகிறது.

இதனால் புதிய மைதானம் பயன்படுத்தவில்லை என யாரும் கூறிவிடக்கூடாது என்பதற்காக பிற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி முதல் மே வரை அவ்வப்போது இங்கு நடத்தப்பட்டன. பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் வெஸ்டர்ன் கழிப்பறையை பயன்படுத்த தெரியாமல் உடைத்துவிட்டு செல்கின்றனர். கழிப்பறைக்கு செல்லும் குழாய்களின் ஸ்குரூக்கள் காணாமல் போனதோடு பைப்களும் பிடுங்கப்பட்டுள்ளன.

மொத்தமுள்ள 66 ஏக்கரில் 22 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் முன்பகுதி கட்டடத்தையொட்டி காலியிடத்தை பிரிக்கும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாடிவாசலில் இருந்து மாடுகளை கலெக் ஷன் பாயின்டில் பிடிப்பதற்காக சுற்றிச் செல்ல வேண்டும். மாடுகளுடன் வரும் மற்றவர்கள் தடுப்பு வேலியை வளைத்து நேரடியாக கலெக் ஷன் பாயின்ட் செல்லும் வகையில் சேதப்படுத்தியுள்ளனர். ஒரேநாளில் ஆயிரக்கணக்கானோர் கூடும் போது மைதானத்தின் பாதிப்பு அதிகமாகிறது.

வருவாய் இல்லை


ஜல்லிக்கட்டு மைதானம் தவிர பார்வையாளர்களின் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சிற்பங்கள், 90 பேர் அமரும் வகையில் உள்ள தியேட்டரில் ஜல்லிக்கட்டு குறித்த படம் பார்க்கும் வசதி, நுாலக வசதி, ஜல்லிக்கட்டு தொடர்பான இரண்டு மியூசியங்கள் உள்ளன. ஆண்டுமுழுவதும் இதை பயன்படுத்த இலவச அனுமதி உண்டு. அதேசமயம் மைதானத்தில் கட்டுப்பாடு இல்லாததால் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தாலும் பொருட்களை சேதப்படுத்துவது யாரென்று கண்டறிய முடியவில்லை. ஆண்டு முழுவதும் பார்வையாளர்களுக்கு காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை இலவச அனுமதி என்பதால் வருவாய்க்கு வழியில்லை.

மதுரை திருமலை நாயக்கர் மகால், அரசு மியூசியத்திற்கு குறைந்தளவு கட்டணம் வசூலிப்பது போல ஸ்டேடியத்திற்கு கட்டணம் நிர்ணயித்தால் ஓரளவு வருவாய் கிடைக்கும். ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் பார்வையாளர்கள் வருகையும் குறைவு. பரந்து விரிந்த மைதானத்தையும் கட்டடத்தையும் பராமரிப்பதற்கு வருவாய் வேண்டும் என்பதால் இதை தனியாருக்கு வாடகைக்கு விடலாம். தமுக்கம் கன்வென்ஷன் மைதானம் போன்று வாடகைக்கு விடப்பட்டால் கண்காட்சி, கருத்தரங்கு ஸ்டால்கள் அமைத்து வருவாய் ஈட்டலாம்.

போக்குவரத்து வசதி இல்லை


அலங்காநல்லுாரில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது இந்த ஸ்டேடியம். பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து அலங்காநல்லுார் வழி வாடிப்பட்டி செல்லும் அரசு பஸ்கள் ஒன்றரை கி.மீ., துாரத்திற்கு முன்பாக மாற்றுவழியில் செல்கிறது. இதனால் பஸ்சில் வரும் பயணிகள் வெயில், மழையின் போது ஒதுங்க வழியின்றி நடந்தே ஸ்டேடியம் வருகின்றனர். வாடிப்பட்டி செல்லும் பஸ்களை உட்புற ரோட்டில் ஸ்டேடியம் வரை சென்று திருப்பி விடப்பட்டால் பார்வையாளர்கள் வந்து செல்வது எளிது. திருவிழாவின் போது மட்டும் பஸ் நின்று செல்வதற்கு பதிலாக ஆண்டுதோறும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இதை பராமரிக்கும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதற்கான ஏற்பாடுகளை முழுமையாக செய்தால் தான் பாழடைந்து போகாமல் தொடர்ந்து பாதுகாக்க முடியும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us