Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின் கட்டண உயர்வால் முடங்கும் நிறுவனங்கள்; அபய குரலெழுப்பும் தொழிலதிபர்கள்

மின் கட்டண உயர்வால் முடங்கும் நிறுவனங்கள்; அபய குரலெழுப்பும் தொழிலதிபர்கள்

மின் கட்டண உயர்வால் முடங்கும் நிறுவனங்கள்; அபய குரலெழுப்பும் தொழிலதிபர்கள்

மின் கட்டண உயர்வால் முடங்கும் நிறுவனங்கள்; அபய குரலெழுப்பும் தொழிலதிபர்கள்

ADDED : ஜூன் 30, 2025 04:04 AM


Google News
திருமங்கலம் : 'நாளை (ஜூலை 1) முதல் அமல்படுத்த உள்ள மின் கட்டண உயர்வு காரணமாக ஏற்கனவே பல்வேறு இடர்பாடுகளில் சிக்கி தவிக்கும் தொழில் துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது' என தொழிற்சாலை உரிமையாளர்கள் கவலையடைந்துஉள்ளனர்.

நாளை முதல் தமிழகத்தில் 3.16 சதவீதம் மின் கட்டண உயர்வு அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே மூலப் பொருள்கள் உயர்வு போன்ற காரணங்களால் தொழிற்சாலைகளை நடத்த முடியாத சூழ்நிலையில் மின்கட்டண உயர்வால் கடுமையான பாதிப்பு ஏற்படும். எனவே தொழில் நிறுவனங்களை நடத்துவதே கேள்விக்குறியாக உள்ளது என தெரிவித்தனர்.

இதுகுறித்து கப்பலூர் சிட்கோ தொழிலதிபர்கள் சங்க தலைவர் ரகுநாத ராஜா கூறும்போது: கொரோனாவுக்கு பின் பலமுறை மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு தொழிற்சாலையும் மொத்த உற்பத்தி செலவில் 40 சதவீதம் வரை மின்சாரத்திற்கே கட்டணமாக செலுத்தும் நிலை உள்ளது. இதனால் தமிழகத்தில் ஆண்டுதோறும் 3 முதல் 6 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடும் அபாயம் ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில் புதிய கட்டண உயர்வு அமல்படுத்தினால் தொழில் நிறுவனங்கள் மேலும் பாதிக்கும். வெளி மாநிலங்களோடு உற்பத்தியில் போட்டி போட இயலாத நிலை ஏற்படும். உற்பத்தி செலவு அதிகரித்து, உற்பத்தி பொருட்கள் விற்பனையாகா விட்டால் தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை கட்ட முடியாத சூழ்நிலை, வெளி மாநில நிறுவனங்களோடு போட்டி போட முடியாத நிலை ஏற்படும். இதனால் தொழில் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்படலாம்.

எனவே அரசு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். அல்லது மின் கட்டண உயர்வை அரசே ஏற்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us