/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசமா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசமா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசமா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசமா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசமா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்
ADDED : ஜூன் 07, 2025 06:51 AM
மதுரை: ''பா.ம.க.,வின் உட்கட்சி பிரச்னை தொடர்பாக சமரசம் செய்யும் நடவடிக்கையில் பா.ஜ., ஈடுபடவில்லை'' என மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 7) இரவு விமானத்தில் மதுரை வருகிறார். நாளை (ஜூன் 8) காலை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, மாநில நிர்வாகிகளை சந்திக்கிறார். மாலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
அவர் பா.ம.க., தலைவர் அன்புமணியை சந்திப்பது குறித்து இதுவரை திட்டம் எதுவும் இல்லை. தமிழகத்தில் தே.ஜ., ஆட்சி வரவேண்டும் என்பதற்காக இங்கு கூட்டம் நடக்கிறது. நாங்கள் கட்சி நடத்துவது தி.மு.க.,வைப் போல யாரையும் சாடுவதற்காக அல்ல. தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி தேவையா. என்னென்ன வாக்குறுதி அளித்தனர். அதில் எதை நிறைவேற்றினர் என்பதையே நாங்கள் பேசுவோம்.
பா.ம.க., பிரச்னையில் பா.ஜ., சமரசத்தில் ஈடுபடவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என்பவர். அவர் மக்கள் நலன் விரும்பி என்பதால் சந்தித்திருக்கலாம். கடந்த தேர்தலில் பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூட்டணியில் விருப்பமின்றி இருந்ததாகக் கூறுவது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.
பா.ஜ., கட்சியில் என்னைவிட எல்லோரும் சீனியர்கள்தான். அவர்கள் அனுசரித்தே நடக்கின்றனர். இதனால் இப்பதவி 2 மாதங்களாக சுகமான சுமையாகவே இருக்கிறது.
தி.மு.க.,வுக்கு எதிரானவர்கள் எல்லோரும் ஓரணியாக உருவாக விரும்புகிறோம். இதில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார். பா.ம.க.,வும் வரும். தே.மு.தி.க., இணைவது பற்றி பொறுத்திருந்து பார்ப்போம். வேறு கட்சிகள் வருவது குறித்து முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முன் சொல்கிறோம்.
தமிழகத்தில் வேல் யாத்திரை, ரதயாத்திரை போல என்னுடைய யாத்திரை அதிகப்படியான பா.ஜ., உறுப்பினர்களை அழைத்துக் கொண்டு சட்டசபைக்கு செல்வதாகத்தான் இருக்கும்.
'ஷா' எத்தனை முறை தமிழகம் வந்தாலும் தி.மு.க.,வை ஒன்றும் செய்ய முடியாது என்கின்றனர். அந்த 'ஷா'தான் மகாராஷ்டிராவில் ஆட்சியைக் கொண்டு வந்தார். எப்போதும் தி.மு.க.,வுக்கு 'ஷா' என்றால் பயம் உண்டு. 1976 ல் தி.மு.க., ஆட்சியை கலைத்தது கே.கே.ஷா என்ற ஆளுனர்தான். அன்று முதல் இன்றுவரை ஷா என்ற பெயரைக் கேட்டாலே தி.மு.க.,வுக்கு பயம்தான்.
இவ்வாறு அவர் பேசினார்.