ADDED : பிப் 25, 2024 04:01 AM
மதுரை : உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில மாநாடு மதுரையில் நடந்தது. மாநில செயல் தலைவர் கோதண்டம் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் பாத்திமா, சீனிவாச ராகவன், பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு பேசியதாவது: நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை உள்ளூர் மொழியில் நடத்தினால் பாமரர்களுக்கு நீதி பரிபாலனம் எளிதில் கிடைக்கும். ராஜஸ்தான், அலகாபாத், ம.பி.,பாட்னா உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாக ஹிந்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழை வழக்காடு மொழியாக மத்திய அரசு, உச்சநீதிமன்றம் அமல்படுத்த வேண்டும் என்றார். அமைச்சர் மூர்த்தி, சு.வெங்கடேசன் எம்.பி.,சங்க மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர் முத்து அமுதநாதன் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் சவுரிராமன் நன்றி கூறினார்.