/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஓய்வூதியத்திற்காக ஓய்வின்றி போராடும் 76 வயது மூதாட்டி; 21 ஆண்டுகளாக பிழைப்புக்கு வழியில்லை என விரக்திஓய்வூதியத்திற்காக ஓய்வின்றி போராடும் 76 வயது மூதாட்டி; 21 ஆண்டுகளாக பிழைப்புக்கு வழியில்லை என விரக்தி
ஓய்வூதியத்திற்காக ஓய்வின்றி போராடும் 76 வயது மூதாட்டி; 21 ஆண்டுகளாக பிழைப்புக்கு வழியில்லை என விரக்தி
ஓய்வூதியத்திற்காக ஓய்வின்றி போராடும் 76 வயது மூதாட்டி; 21 ஆண்டுகளாக பிழைப்புக்கு வழியில்லை என விரக்தி
ஓய்வூதியத்திற்காக ஓய்வின்றி போராடும் 76 வயது மூதாட்டி; 21 ஆண்டுகளாக பிழைப்புக்கு வழியில்லை என விரக்தி
ADDED : ஜன 11, 2024 04:43 AM

மதுரை : ஓய்வு பெற்று 20 ஆண்டுகளாகியும் ஓய்வூதியத்திற்காக போராடிக் கொண்டே பள்ளிக்கூட வாசலில் எழுதுபொருள் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி முத்துப்பேச்சி.
மதுரை தெற்குவெளிவீதி மாநகராட்சி ஈ.வெ.ரா., நாகம்மையார் மேல்நிலைப்பள்ளியில் துப்புரவு பணியாளராக பணியாற்றியவர் முத்துப்பேச்சி. இவர் 1976ல் இங்கு மாதம் ரூ.18 சம்பளத்தில் பகுதிநேர பணியாளராக சேர்ந்தார்.
1995க்கு பின் 2002ல் ஓய்வு பெறும் வரை ரூ.4 ஆயிரம் சம்பளத்தில் முழுநேர பணியாளராக ஓய்வு பெற்றார்.
ஓய்வூதிய பலனுக்காக பல்வேறு அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் இதுவரை கிடைத்தபாடில்லை. இவருக்கென வீடு இல்லாததால் வாடகை வீடுகளில் வசிக்கும் மகன், மகள் வீடுகளில் இரவு தங்க செல்கிறார். இத்தனை காலமும் தான் பணியாற்றிய பள்ளி முன் பேப்பர், பென்சில், பேனா என பொருட்களை விற்று வருகிறார்.
அந்தக் காலத்திலேயே 8வது படித்த இவர் இன்றும் பணிப்பதிவேடு முதல் ஓய்வு பெற்ற, அதிகாரிகளுக்கு அனுப்பிய, பதில் பெற்ற ஆவணங்களை பத்திரப்படுத்தி நான்கைந்து பைகளில் எடுத்துச் சென்று ஒவ்வொரு அலுவலகமாக அலைகிறார்
தனது வேதனையை கண்ணீர் மல்க அவர் கூறியதாவது:
கணவர் சுப்பிரமணி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அடிப்படை பணியாளர்கள் 60 வயதில்தான் ஓய்வு பெறுவர். ஆனால் 58 வயதில் ஓய்வு அளித்தனர். பணியில் இருந்து ஓய்வு அளிக்க மாநகராட்சி ஆணையாளர் கையெழுத்து எதுவும் இடவில்லை. உள்ளாட்சி தணிக்கை அதிகாரி, கல்விஅதிகாரிகளே கையெழுத்திட்டு அனுப்பினர். அவர்களுக்கு அந்த அதிகாரம் இல்லை.
எனக்கு ஓய்வூதியம் வழங்காததால் பலதரப்பிலும் 20 ஆண்டுகளாக முறையிட்டு வருகிறேன். பலன் கிடைக்கவில்லை. இணையதளம் மூலம் 2005ல் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமிடமும் முறையிட்டேன். அவரது அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமைச் செயலருக்கு எனதுவேண்டுகோளை பரிசீலிக்க உத்தரவிட்டுள்ளதாக பதில் கிடைத்தது.
தொடர்ந்து தனிஆளாகவே இதற்காக போராடி வருகிறேன். மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் 4 முறை மனுகொடுத்துள்ளேன். அவர் எனது மனுமீது சிறப்பு கவனம் எடுக்கும்படி மாநகராட்சிக்கு தெரிவித்தும் பலன் இல்லை. உணவு, மருத்துவ செலவுக்கு சிரமப்படுகிறேன். எனது வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்த்து தீர்வு காண வேண்டும் என்றார்.