ADDED : மார் 25, 2025 04:39 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 92 ஊராட்சிகள் காசநோய் இல்லாத ஊராட்சிகளாக தகுதி பெற்றன.
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்க வளாகத்தில் காசநோய் தினவிழா நடந்தது.
கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார், குடும்ப நலத்துறை துணை இயக்குநர் நடராஜன் முன்னிலை வகித்தனர். காசநோய் பற்றிய விழிப்புணர்வு கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சிறப்பாக செயல்பட்ட டாக்டர்கள், காசநோய் திட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் விருது வழங்கினார். டாக்டர்கள் மணிவண்ணன், அழகவெங்கடேசன், அரவிந்த் கலந்து கொண்டனர்.
காசநோய் துறை துணை இயக்குநர் ராஜசேகரன் பேசியதாவது: 2023 முதல் காசநோய் இல்லாத ஊராட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்தாண்டு 35 ஊராட்சிகள் தேர்வான நிலையில் இந்தாண்டு 92 ஊராட்சிகள் தகுதி பெற்றுள்ளன. அரசுத்துறை, தனியார் நிறுவன பணியிடங்களில் காசநோய் கண்டறியும் முகாம், நடமாடும் எக்ஸ்ரே, நகர்ப்புற பின்தங்கிய பகுதிகளில் இதுவரை 440 முகாம்கள் மூலம் 16ஆயிரத்து 86 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 82 புதிய காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர்.
காசநோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் மதுரையில் கடந்தாண்டு 6222 பேரின் வங்கிக்கணக்கில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 70ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.