/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசியல் தலையீட்டால் கிடப்பில் திருநகர் ரோடு விரிவாக்கப்பணி அரசியல் தலையீட்டால் கிடப்பில் திருநகர் ரோடு விரிவாக்கப்பணி
அரசியல் தலையீட்டால் கிடப்பில் திருநகர் ரோடு விரிவாக்கப்பணி
அரசியல் தலையீட்டால் கிடப்பில் திருநகர் ரோடு விரிவாக்கப்பணி
அரசியல் தலையீட்டால் கிடப்பில் திருநகர் ரோடு விரிவாக்கப்பணி
ADDED : ஜூன் 15, 2024 06:25 AM
மதுரை : மதுரை பழங்காநத்தம் - திருநகர் ரோடு விரிவாக்கப் பணிகள் சுணக்கம் அடைந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மதுரை நகரை அணுகும் பிரதான ரோடுகள் அனைத்தும் வாகன பெருக்கத்திற்கேற்ப நெடுஞ்சாலைத் துறையால் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. சிவகங்கை, தேனி, மேலுார், ராமநாதபுரம், அருப்புக்கோட்டை ரோடுகள் விரிவு படுத்தப்பட்டது போல திருமங்கலம் செல்லும் ரோடும் பழங்காநத்தம் முதல் திருநகர் வரை 6 கி.மீ., தொலைவுக்கு ரூ.40 கோடி செலவில் விரிவுபடுத்தும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இருபுறமும் தலா 7.5 மீட்டரில் ரோடுகள், மீடியன், ரோட்டோரம் மழைநீர் வாய்க்கால் என 65 அடிகள் வரை விரிவாக்கம் பெறும் வகையில் முதற்கட்டமாக ரோட்டோரம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
அடுத்து ரோட்டின் இருபுறமும் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவது, ரோடுகளில் வரும் கழிவுநீரோடைகளை முறைப்படுத்துவது என செயல்படுகின்றனர். இப்பணி சில மாதங்களாக நடந்து வந்தது. மழைநீர் வடிகால் வாய்க்கால் அமையும் பகுதியில் மின்கம்பங்கள் இருப்பதால் அப்பணி துண்டு துண்டாக நடந்தது.
இந்நிலையில் பணிகள் திடீரென சுணக்கமடைந்தன. இந்த ரோட்டில் மின்கம்பங்கள், எம்.ஜி.ஆர்., சிலை, திருநகரில் வணிகவளாகத்தை அப்புறப்படுத்துவதில் அரசியல் தலையீடால் பணிகள் தடைபட்டன. இதனால் ரோட்டோரம் தோண்டி வாய்க்கால் கட்டிய பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கின்றன.
இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்பட்டு கடைகள், வீடுகள் என பலருக்கும் பாதிப்பு உண்டாகிறது. மின்கம்பங்களை அகற்றினால்தான் பணி நடக்க வாய்ப்புள்ளது.
அதற்காக மின்வாரியத்திடம் நெடுஞ்சாலைத்துறை பணம் செலுத்தியுள்ளனர். ஆயினும் மின்கம்பங்கள் அகற்றப்படாததால் பணிகள் சுணங்குவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மோகன்காந்தியிடம் கேட்டபோது, ''மின்கம்பங்கள், மாநகராட்சி குடிநீர் பைப்லைன்களை அப்புறப்படுத்தும்படி இருதுறைகளிடமும் கேட்டுள்ளோம். சில மாதங்களாக தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்ததால் அப்பணிகளுக்கு டெண்டர் விட முடியாத நிலை இருந்தது. இதனால் பணிகள் கிடப்பில் இருந்தன. விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் இனி பணிகளில் வேகம் பிடிக்கும்'' என்றார்.