ADDED : ஜூலை 22, 2024 05:22 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முன்விரோதத்தில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாந்த் 22, பூவந்தியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இவருக்கும் அதே தெருவை சேர்ந்த இவரது நண்பர் கார்த்திக்கிற்கும் 29, ஓராண்டுக்கு முன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு ராஜேந்திர பிரசாந்த், நண்பர் சண்முகராஜாவுடன் கார்த்திக் வீட்டிற்கு சென்றார். அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. கார்த்திக் வீட்டில் இருந்த இரும்பு படிக்கல்லை ராஜேந்திர பிரசாந்த் எடுத்து கார்த்திகை தாக்கிவிட்டு சென்றார்.
காயமடைந்த கார்த்திக், தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேந்திர பிரசாந்தை விரட்டிச்சென்று கழுத்தில் குத்தினார். ராஜேந்திர பிரசாந்த் இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் கார்த்திகை கைது செய்து விசாரிக்கின்றனர்.