/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாநில தலைமையின் மவுனம் மனவேதனையின் உச்சம்: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் குமுறல் மாநில தலைமையின் மவுனம் மனவேதனையின் உச்சம்: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் குமுறல்
மாநில தலைமையின் மவுனம் மனவேதனையின் உச்சம்: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் குமுறல்
மாநில தலைமையின் மவுனம் மனவேதனையின் உச்சம்: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் குமுறல்
மாநில தலைமையின் மவுனம் மனவேதனையின் உச்சம்: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசலால் குமுறல்
ADDED : ஜூலை 19, 2024 06:06 AM

மதுரை: மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால் மாநில தலைமை கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் நகர், மேற்கு, கிழக்கு மாவட்டம் என 3 பிரிவுகளாக பா.ஜ., செயல்படுகிறது. சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு பிடிக்காதவர்களை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாகவும், அதனை மாநில தலைமை கண்டு கொள்வதில்லை எனவும் நகர் நிர்வாகிகள் வருத்தத்தில் உள்ளனர்.
நகர் தலைவர் மகாசுசீந்திரன் வெளியிட்ட அறிக்கையில், ''பா.ஜ., சாதாரண தொண்டருக்கும் பொறுப்புகளை கொடுக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி வரை பதவி வரை பெற்று இருக்கின்றனர். ஆனால் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சிலர் இதை உணராமல் தன்னை நேரடியாக சிவனும், பார்வதியும் பொறுப்பில் அமர்த்தினர் என்று நினைத்துக் கொண்டு 200க்கும் மேற்பட்டோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். கட்சிக் கொடியை காரில் கட்டக் கூடாது என போலீசில் புகார் அளித்து, அதனை அகற்றும்படி தெரிவித்துள்ளனர்.
இதில் மாநில தலைமைக்குழு மவுனம் காப்பது மனவேதனையை உச்சமாக்குகிறது. பாதித்த தொண்டர்களுக்கு மாநில தலைமை ஆறுதல் கூற வேண்டும். இது கட்சி எழுச்சியோடு செயல்பட உதவும். பாதித்த நிர்வாகிகளுக்கு அரணாக மதுரை நகர் பா.ஜ., இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மகாசுசீந்திரன் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகியாக இருந்தபோது பலரை பொறுப்புகளில் நியமித்தார். பின் 3 மாவட்டங்களாக பிரித்தபின், அவரால் நியமிக்கப்பட்டவர்கள் புதிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஒத்துப்போகவில்லை. கருத்து வேறுபாடு எழுந்ததால் நுாற்றுக்கணக்கான நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.
ஒருவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க மாநில தலைமைக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஆனால் இதற்கு காரணம் மகாசுசீந்திரன் ஊக்கமளித்ததே. இதுபோன்ற நிலையில் மாநில பொறுப்பாளர்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும். ஆனால் இங்கு மாநில பொறுப்பில் இருப்பவர்கள் யாரும் பா.ஜ.,வில் இருந்து வந்தவர்கள் இல்லை.
துணை அமைப்புகளான ஏ.பி.வி.பி., சுதேசி உட்பட பல்வேறு பரிவார் அமைப்புகளில் இருந்து வந்தவர்கள். மேலும் பார்வையாளர்கள் இதில் தலையிட வேண்டும் என்றால் அவர்களுக்கு மாநில தலைமை போதுமான அதிகாரம் வழங்கவில்லை. இதனால் மதுரை பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் அதிகரித்துவிட்டது என்றனர்.