மூதாட்டி கொலை
கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி அழகன் 70. இவரது மனைவி பாப்பு 60. இருவரும் கொட்டாம்பட்டி அருகே கச்சிராயன்பட்டி பஸ் ஸ்டாப்பில் தங்கி தென்னை நார் துடைப்பம் தயாரித்து சென்னைக்கு கொண்டு சென்று விற்பது வழக்கம். நேற்று காலை பஸ் ஸ்டாப் அருகே பாப்பு வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அழகன் மதுரை அரசு மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெறுகிறார். சம்பவ இடத்தை எஸ்.பி., அரவிந்த், டி.எஸ்.பி., பிரீத்தி, எஸ்.ஐ., முத்துக்குமார் ஆய்வு செய்தனர். பணம் பறிக்கும் நோக்கில் கொலை நடந்ததா என கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருட்டு
திருமங்கலம்: கருவேலம்பட்டி சதுரகிரி 37. நேற்று முன்தினம் மாமனார் இறந்ததால் வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆறரை பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி மாணவிகள் காயம்
மேலுார்: அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு நேற்று காலை பெருமாள்பட்டி, கணபதியாபுரம் மற்றும் உசிலம்பட்டி கிராமங்களில் இருந்து பஸ்சில் வந்த மாணவிகள் நடந்து சென்றனர். சேனல் ரோட்டில் இருந்து வேகமாக வந்த பதிவெண் இல்லாத புதிய கார், பத்தாம் வகுப்பு மாணவிகள் 4 பேர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் புதுமண தம்பதிக்கு வழங்கப்பட்ட புதிய காருக்கு பெட்ரோல் நிரப்ப சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
கணவர் காயம்; மனைவி ஓட்டம்
மதுரை: அப்பன்திருப்பதியை அருகே வெள்ளியங்குன்றம் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் 32. மனைவி மாலதி. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். மனைவி வேலைக்கு செல்வது பிடிக்காததால் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் கொதிக்கும் எண்ணெய்யை செந்தில்குமார் மீது ஊற்றி விட்டு மாலதி தப்பிவிட்டார். காயமடைந்த செந்தில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர்கள் மோதல்; ஒருவர் பலி
மதுரை : பைபாஸ் ரோடு நேரு நகர் சந்திப்பு கருப்பசுவாமி கோயில் அருகே இரு டூவீலர்கள் நேருக்கு நேர் மோதின. இதில் எப்.எம்., ஒன்றில் விற்பனை பிரிவில் பணிபுரியும் ராம்குமார் 40, காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் அவர் இறந்தார். விபத்து ஏற்படுத்தியவர் மது போதையில் இருந்துள்ளார். தப்பிய அவரை போலீசார் தேடுகின்றனர்.