ADDED : ஜூலை 29, 2024 07:07 AM

மேலுார் : மதுரை மாவட்டம் மேலுாரில் இனம்புரியாத தோல்நோய் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலுார் சந்தைப்பேட்டை 2 வது தெருவில் இருநுாறுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த கன்சல் மகரிபா 35, நசீமா 42, மரியம் 42, பிரேம் நசீர் 20, ரபீக் 19, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 15 நாட்களாக உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு தடிப்பு ஏற்பட்டு தோலில் மேல் பகுதியில் ரத்தம் வர ஆரம்பித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்த வீட்டில் உள்ளோருக்கு நோய் பரவ ஆரம்பித்துள்ளதால் அதே பகுதியில் உள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை அளிக்கும் மருத்துவரிடம் நோய் குறித்து கேட்டதற்கு காரணம் தெரியவில்லை என்றதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். சுகாதாரத்துறையினர் இப் பகுதியில் முகாம் அமைத்து மர்ம நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன் கூறுகையில், உடனடியாக பரிசோதனை செய்யப்படும் என்றார்.