ADDED : ஜூலை 24, 2024 05:38 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே 10 க்கும் மேற்பட்ட மாடுகளின் முகத்தில் கடித்து வைத்துச் சென்ற நாயால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சி கட்டளைமாயன்பட்டி கிராமத்தில் நேற்று மாலை வெறிபிடித்த நாய் ஒன்று வீடுகளின் முன்பு கட்டப்பட்டிருந்த மாடுகளின் முகத்தில் கடித்துவிட்டு சென்றது. மற்ற நாய்களும், மாடுகளும் சத்தம் எழுப்பியதைப் பார்த்து கிராம மக்கள் சுதாரிப்பதற்குள் 10க்கும் மேற்பட்ட மாடுகள், கன்றுகளை முகத்தில் கடித்து விட்டு ஓடியது. உத்தப்பநாயக்கனூர் கால்நடை டாக்டர் மேனகா தலைமையில் மருத்துவக்குழுவினர் நாயால் கடிபட்ட மாடுகளுக்கு தடுப்பூசி போட்டனர். தொடர்ந்து காயம்பட்ட இடத்தை சுத்தப்படுத்தி மருந்து தடவினர். குறிப்பிட்ட இடைவெளியில் மேலும் இரண்டு முறை தடுப்பூசி போட வேண்டும் என கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
கட்டளைமாயன்பட்டி கிராமத்திற்குள் மேலும் பல நாய்கள் சுற்றிவருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தவும், தேவையான தடுப்பூசிகள் போடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.