/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிகிறதா 4 தொகுதிகளில் டிபாசிட் காலி மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடம் தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிகிறதா 4 தொகுதிகளில் டிபாசிட் காலி மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடம்
தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிகிறதா 4 தொகுதிகளில் டிபாசிட் காலி மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடம்
தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிகிறதா 4 தொகுதிகளில் டிபாசிட் காலி மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடம்
தென்மாவட்டங்களில் அ.தி.மு.க., ஓட்டு வங்கி சரிகிறதா 4 தொகுதிகளில் டிபாசிட் காலி மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் 3ம் இடம்
ADDED : ஜூன் 06, 2024 04:06 AM
மதுரை : 'தேசிய கட்சிகளுடன் இனி எக்காலத்திலும் கூட்டணி கிடையாது' என்ற கோஷத்துடன் பா.ஜ.,வை கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டு தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க., இத்தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்பட்ட தென்மாவட்டங்கள் கூட கைகொடுக்கவில்லை. இதற்கு உட்கட்சி பூசலா, கூட்டணி பலம் இல்லாததா, கட்சி மூன்றாக பிரிந்தது காரணமா என கட்சி தலைமை சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியை கைப்பற்றிய பழனிசாமி, திட்டமிட்டு காய் நகர்த்தி ஒற்றை தலைமையாக கட்சியை வழிநடத்தி வருகிறார். முதல்வராக, கட்சி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு பழனிசாமி சந்தித்த 9 தேர்தல்களில் அ.தி.மு.க., சில வெற்றியை மட்டுமே பெற்றது. 2019 லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியை மட்டும் தக்க வைத்துக்கொண்ட அ.தி.மு.க., இத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக 'அவுட்' ஆனது.
அ.தி.மு.க.,வின் கோட்டையாக கருதப்படும் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டுகள்தான் பெரும்பான்மை. அவர்களின் முகமாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருந்த நிலையில் உட்கட்சி பூசலால் வெளியேற்றப்பட்டார்.
தன் முகத்தை பார்த்து மக்கள் ஓட்டளிப்பார் என கனவு கண்டு பா.ஜ., கூட்டணியில் பலாப்பழத்துடன் ராமநாதபுரத்தில் நின்று தோல்வி கண்டார். அங்கு அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் 99,780 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
அதேபோல் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், தான் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி (முன்பு ஆண்டிப்பட்டி), மக்கள் பாசத்துடன் 'விசில்' அடித்து வரவேற்பார்கள் என தேனியில் குக்கருடன் நின்றார். அவரும் தனது சிஷ்யராக இருந்த தி.மு.க.,வின் தங்கத்தமிழ்செல்வனிடம் 2,78,825 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார். இத்தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி 1,55,587 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்திற்கு சென்றார். இதேநிலைதான் மதுரையிலும் ஏற்பட்டது. அ.தி.மு.க., வேட்பாளர் சரவணன் தோல்வி கண்டாலும் 2ம் இடத்திலாவது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2,04,652 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்திற்கு சென்றார். பா.ஜ.,வின் ராம சீனிவாசன் 2ம் இடத்திற்கு முன்னேறினார்.
'கோட்டை'விட்ட அ.தி.மு.க.,
கட்சி ஆரம்பித்த போது முதல் வெற்றியை தந்த கோட்டை நகரான திண்டுக்கல்லை அ.தி.மு.க., தொடர்ந்து கோட்டை விட்டு வருகிறது. இத்தொகுதியில் அ.தி.மு.க., நேரடியாக போட்டியிட தயங்கி கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வருகிறது. இம்முறை அ.தி.மு.க., சின்னத்தில் எஸ்.டி.பி.ஐ., முபராக் போட்டியிட்டு 4,43,821 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டார்.
சிவகங்கையில் காங்கிரசின் கார்த்தி மீண்டும் போட்டியிடுவதால் அவர் மீதான அதிருப்தி தங்களுக்கு சாதகமாக இருக்கும் எனக்கருதி அ.தி.மு.க., நேரடியாக களம் இறங்கி தோல்வியை கண்டு 2ம் இடத்திற்கு சென்றது.
நட்சத்திர தொகுதியான அறியப்பட்ட விருதுநகரில் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கும், காங்., மாணிக்கம் தாகூருக்கும்தான் கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொரு சுற்றிலும் காட்சிகள் விறுவிறுப்பாகி 'கிளைமாக்சில்' காங்., வென்றது.
4வது இடம்
திருநெல்வேலியில் 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என்பது போல் நெல்லை அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் மாற்றப்பட்டு ஜான்சிராணி அறிவிக்கப்பட்டார்.
காங்., பா.ஜ.,வை மீறி ராணி ஜான்சிராணி போல் வெற்றி பெறுவார் என கருதியநிலையில் 89,601 ஓட்டுகள் பெற்று 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
துாத்துக்குடியில் தி.மு.க., கனிமொழி வெற்றி பெற்ற நிலையில் அ.தி.மு.க., சிவசாமி வேலுமணி 1.47 லட்சம் ஓட்டுகள் பெற்று 2ம் இடத்திற்கு சென்றார். தென்காசியில்(தனி) புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்ட நிலையில் மொத்த அலையில் அவரும் தப்பவில்லை. 2.29 லட்சம் ஓட்டுகள் பெற்று 2ம் இடத்திற்கு சென்றார். கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சியைவிட குறைவாக, மொத்தம் 41,393 ஓட்டுகள் பெற்று அ.தி.மு.க.,வின் பசிலான் நசரேத் 4ம் இடத்திற்கு சென்றார்.
டிபாசிட் காலி
தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி, தேனி, துாத்துக்குடி, நெல்லையில் அ.தி.மு.க., டிபாசிட் இழந்தது. தமிழகத்தில் இக்கட்சி டிபாசிட் இழந்த 7 தொகுதிகளில் 4 தென்மாவட்டங்களில் உள்ளன.
தேர்தலுக்கு தேர்தல் அ.தி.மு.க.,வின் ஓட்டு வங்கி தென்மாவட்டங்களில் சரிந்து வருகிறது என்பதையே இத்தேர்தல் காட்டுகிறது.
ஒவ்வொரு தேர்தலிலும் 'பாடம்' கற்று வரும் பழனிசாமிக்கு 2026 சட்டசபை தேர்தல் பலப்பரீட்சையாக இருக்கும்.