Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்… மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

ADDED : ஜூலை 24, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
பட்ஜெட் ஒன்று தான்… பார்ப்பவர்களின் பார்வை கோடியாய் விரிந்து விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. ஒரு பிரிவினருக்கு எட்டாக்கனியாகவும் ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் அதிருப்தியாகவும் இருக்கும் மத்திய பட்ஜெட்… மற்றொரு பிரிவினருக்கு வளர்ச்சிக்குரியதாக திருப்தியாகவும் சந்தோஷமாகவும் பாராட்டுக்குரியதாகவும் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது. பட்ஜெட் அவரவர் பார்வையில்… அவரவர் கருத்துகள்... உள்ளது உள்ளபடியே இங்கே பேட்டியில் இடம்பெற்றுள்ளது. மதுரை மக்கள் சொல்வது...

மக்களை சென்றடையும் வழி என்ன


- பேராசிரியர் முத்துராஜா, பொருளாதாரத்துறை தலைவர், அமெரிக்கன் கல்லுாரி

வேளாண்மை துறையில் குறிப்பாக கிட்டங்கி வசதி, புதிய உற்பத்தி உத்திகள், விவசாயக் கடன் அட்டை, அங்காடிப்படுத்துதல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்தலும் தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தது. இன்றைய நிரந்தரமற்ற வேலைவாய்ப்பு சூழலில் அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வேலைவாய்ப்பு திறன் அபிவிருத்தி திட்டமிடுதலும் வரவேற்கக்கூடிய விஷயங்கள்.

அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை, தினம் தினம் மக்களை மிரட்டும் உணவுப் பணவீக்கம், வரவு செலவுத் திட்ட விவரங்களையும் நன்மைகளையும் பாமரமக்களுக்கு முழுவதுமாக கொண்டுசெல்ல புதிய வழிமுறைகள் செயல்படுத்தாதது போன்றவை கவலை அளிக்கிறது.

வரிசார்ந்த, மானியம் சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகள் உள்ளன. வரவு செலவு திட்டத்தின் நன்மைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் மக்களை முழுமையாக சென்றடைவதற்கான வழிமுறைகள் அறிவியல்பூர்வமாக சொல்லப்படவில்லை.

ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும் ஏமாற்றமும்


- பெருமாள், தேசிய துணைத்தலைவர்பாரதிய கிசான் சங்கம்

அடுத்த இரண்டாண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நாட்டில் சமையல் கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் கடலெண்ணெய், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு பெறவும் உற்பத்தி சேமிப்புக் கிடங்குகள் அமைப்பது நல்ல விஷயம்.

விவசாய ஆராய்ச்சி உள்கட்டமைப்பை தீவிரமாக ஆய்வு செய்து பருவநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய மற்றும் அதிக உற்பத்தி தரக்கூடிய பயிர்களின் விதைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதற்காக தகுந்த நிதி ஒதுக்கப்படும். இந்தப் பணியில் தனியார் விவசாய வல்லுனர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைத்துக் கொள்ளப்படுவர் என்ற அறிவிப்பு விவசாயத்துக்கு கிடைத்த வெற்றி.

இந்த ஆண்டு விவசாயத் துறைக்கு மொத்தம் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் பாரதிய கிசான் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான குறைந்தபட்ச ஆதார விலைக்கு (எம்.எஸ்.பி.,) சட்ட பாதுகாப்பு, உழவர் பாதுகாப்பு நிதியை அதிப்படுத்துதல், விவசாய இடுபொருட்களின் மீதான ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்தல் சம்பந்தமான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

மதுரை மெட்ரோ என்னாச்சு


திருமுருகன், மாநில தலைவர், தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் தயாரிப்பாளர்கள் சங்கம்

ரூ.10 லட்சம் வரை கல்விக் கடன், தொழில் தொடங்குவதற்காக ரூ.20 லட்சம் வரை முத்ரா திட்டத்தில் கடன் அதிகரிப்பு வரவேற்கக்கூடிய விஷயம். ஆனால் தொழில்துறைக்கு குறிப்பாக குறுசிறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது அவற்றை காப்பாற்றுவதற்கான எந்த ஒரு முயற்சியும் இல்லை. குறிப்பாக குறுசிறு தொழில்கள் பெற்றுள்ள கடனை கட்ட முடியாமல் 34 சதவீதம் மூடிவிட்டனர். இவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் ஏற்படுத்தவில்லை. மதுரை விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது வருத்தமான விஷயம். சுத்தம், சுகாதாரம், சாலை வசதி, நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களும் வகுக்கப்படவில்லை.

தங்கம் விலை குறைந்தால் போதுமா


- குமார், துணைத்தலைவர்தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம்

தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை உணவுத்தொழிலுக்கும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். தங்கம் விலை குறைந்தால் வயிறு நிரம்பி விடுமா. விவசாய உற்பத்திச் செலவு குறைவதற்கான வழிகள் சொல்லியிருக்கலாம். விளைபொருள் விற்பனையும் குறைய வேண்டும். பருப்பு வகைகளை பிறமாநிலங்களில் இருந்து வாங்கும் போது அதற்கான வரியை குறைத்திருக்கலாம். முத்ரா கடன் திட்டத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் நீட்டிப்பு செய்திருப்பது நல்ல விஷயம்.

பிரஷர் இல்லாத பட்ஜெட் இது


- ஜெயபாலன், நிறுவனர், கன்சோட்ரீ சமூக பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம்

இந்த பட்ஜெட் இன்னும் 6 மாதத்தில் பட்ஜெட் முடிந்து விடும் என்பதால் மத்திய அரசுக்கு பிரஷர் இல்லாத பட்ஜெட் இது. அரசு வரி வருவாயை அதிகரிப்பதற்கான ஒவ்வொரு வழிகளும் நுணுக்கமாக ஆராயப்பட்டு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதை மக்களிடம் திருப்பி கொடுப்பதற்கான திட்டங்கள் குறைவாக உள்ளது. புதிய பிசினஸ் ஆரம்பிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஊழியர்களுக்கு ஒருமாத சம்பளம், பி.எப். ஊக்கத்தொகை போன்ற விஷயங்கள் சொல்லப்பட்டாலும் பெரிய தொழில்களுக்கு குறிப்பிட்டு எதுவும் இல்லை.

பீகாரை தனி நாடு போல பாவித்து சலுகைகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு பெரிய திட்டம் இல்லை.

ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்


- ஜெகதீசன், தலைவர்தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம்

தொழில் வணிகத் துறையினரும், பொதுமக்களும் பல்வேறு சலுகைகளை எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டிருந்தாலும் பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை. சுங்கவரியில் மட்டும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. அதே போல ஜி.எஸ்.டி.யில் விலக்கு அளிக்கப்பட்டவைகளைத் தவிர்த்து வரி விகிதங்கள் 5,12 மற்றும் 18 சதவீதங்கள் என மூன்று விகிதங்களுக்குள் கொண்டு வரப்பட வேண்டும் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி.யில் உள்ள 28 சதவீத வரியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இந்தப் பட்ஜெட்டில் பிரதிபலிக்கவில்லை.

ஜி.எஸ்.டி.யில் சரக்கு, சேவைகளை கையாள்பவர்களுக்கான வரம்பு ரூ.40 லட்சமாக உயர்த்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின் சாலை கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.26 ஆயிரம் கோடி, வெள்ளத் தடுப்புக்கு ரூ.11ஆயிரத்து 500 கோடி, சுற்றுலா மேம்பாட்டுக்காக ரூ.70ஆயிரம் கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடும், ஆந்திர மாநிலத்திற்கான ரூ.15ஆயிரம் கோடிக்கு ஏராளமான சிறப்புத் திட்டங்கள் அறிவிப்புகள் உள்ளன. பல்வேறு அரசியல் அழுத்தங்களுக்காகவே பீகார், ஆந்திராவிற்கு ஆயிரக்கணக்கான கோடிகள் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

தென் தமிழகத்திற்கான ரயில்வேத் திட்டம், மெட்ரோ, விமான நிலைய மேம்பாடு உள்ளிட்ட எந்தவொரு புதிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

பணவீக்கம் குறைவது வரவேற்கத்தக்கது


- ஜெயப்பிரகாசம்கவுரவ ஆலோசகர், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம்

நாட்டின் பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்பதை வரவேற்கிறோம். உணவின் தரத்தை பரிசோதிக்க 100 தர பரிசோதனை கூடங்கள் நிறுவுவது நல்ல திட்டம். சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினத்தில் தொழில் வழித்தடம், நாடு முழுவதும் 12 தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் போது மதுரை - துாத்துக்குடி தொழில் காரிடார் கண்டிப்பாக அமைக்க வேண்டும். தொழில் தொடங்குவதை எளிமைப்படுத்த ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டு வருவது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உருவாக்க மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதை வரவேற்கிறோம். வீடுகளில் மேற்கூரை அமைத்து சோலார் தகடு அமைக்கும் திட்டத்தின் மூலம் மின்செலவு குறைக்க திட்டமிட்டது நல்ல முயற்சி.

பாராட்டுக்குரிய பட்ஜெட் இது


- ரத்தினவேலு, தலைவர், வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம்

வேளாண் மற்றும் உணவுப் பதனீட்டுத் துறைகளின் மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் இத்துறைகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். வேளாண் துறையின் வளர்ச்சிக்காக வேளாண் ஆராய்ச்சித்திட்டங்கள், காலநிலை மாற்றத்தினை எதிர் கொண்டு விளைச்சலை அதிகம் தரும் 109 பயிர் வகைகளை அறிமுகம் செய்வதும் நல்ல முயற்சி. வேலை வாய்ப்பு பெருக்கத்திற்கும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசின் கட்டமைப்புத் திட்டங்களுக்கான மூலதனச் செலவிற்கு அதிகநிதி ஒதுக்க கேட்டிருந்தோம். அதை ஏற்றுக்கொள்ளும் வகையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதத்தை அதாவது ரூ.11 லட்சம் கோடிக்கும் மேல் மூலதன செலவினத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளதை மனதார வரவேற்கிறோம். மேலும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்கள் துறை மேம்பாட்டை கருத்தில் கொண்டு குறிப்பாக அதிக வேலை வாய்ப்பு தரக்கூடிய நிறுவனங்களின் மேம்பாட்டிற்கு நிதி, தொழில்நுட்ப உதவி அளிக்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டுக்குரியது.

‛கார்பஸ்' நிதி ஒதுக்கியது பாராட்டுக்குரியது


- லட்சுமி நாராயணன்தலைவர், மடீட்சியா

நிறுவனங்கள் கிரெடிட் கேரண்டி திட்டத்தில் பிணையம் இன்றி இயந்திரங்கள் வாங்குவதற்கான கடன் வசதி செய்ததையும் ரூ.100 கோடி 'கார்பஸ்' நிதி ஒதுக்கியதையும் பாராட்டுகிறோம். நெருக்கடி காலங்களில் குறு சிறு தொழில் நிறுவனங்களுக்கு உதவ சிறப்புத் திட்டம் (ஸ்ட்ரெஸ்) அறிமுகப்படுத்தியது நல்ல விஷயம். அரசு, தனியார் பங்களிப்புடன் கூடிய இ - காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்கான டார்மெட்டரி அமைக்க அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு தொழில்திறன் மேம்பாடு பயிற்சி வழங்குவதாக அறிவித்தது வரவேற்கத்தக்கது.

எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது, தொழிற்பேட்டைகளுக்கான ஒருங்கிணைந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பழைய, புதிய தொழிற்பேட்டைகளுக்கு 90 சதவீத மானியம் வழங்குவது, நிறுவனங்கள் சோலார் எனர்ஜி நிறுவினால் சிட்பி மூலம் 25 சதவீத மானியம் வழங்குவது, நிறுவனங்கள் தொழில்நுட்ப மேம்பாடு அடையும் போது அதற்கு 75 சதவீத மானியம் தருவது போன்ற திட்டங்களை எதிர்பார்த்தோம். எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் நலிவடைந்தால் அவர்களது வீடுகளை ஜப்தி செய்வதற்கு பதிலாக இன்சூரன்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

ஏழைகளுக்கு வீடு நனவாகும்


- சுஷ்மிதாகல்லுாரி மாணவி

கடந்தாண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ஆந்திரா, பீகாருக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2020 ல் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டபோது முதலில் கர்நாடகா தான் பின்பற்றியது. இந்த புதிய கல்வி கொள்கையின் படி தரமான கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதை வரவேற்கிறேன். எல்லா மாநிலங்களும் பின்பற்றலாம். அனைவருக்கும் சமமாக கல்வி கிடைக்கும். நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு திட்டமும் வீடுகளில் சோலார் மின் திட்டமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இளைஞர்களின் எழுச்சி பட்ஜெட்


- நிர்மல்குமார்பயிற்றுநர், தானம் அறக்கட்டளை

இந்த பட்ஜெட்டில் விவசாயத்திற்கும் கிராமப்புற மேம்பாட்டுக்கும் நிறைய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. காலநிலை தட்பவெப்பத்திற்கேற்ப பயிர் அறிமுகம் செய்வதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதும் இப்போதைய சூழலுக்கு தேவையான ஒன்று. 400 மாவட்டங்களில் நிலங்களை டிஜிட்டல் மயமாக்குவது புதிய அணுகுமுறை. விவசாய ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் ஒரு கோடி இளைஞர்களுக்கு 500 சிறந்த கம்பெனிகளில் 'யூத் இன்டர்ன்ஷிப்' பயிற்சி தருவது அவர்களது வாழ்வில் பெரிய மாற்றத்தை தரும்.

அரசு சார்பில் சம்பளம் அற்புதம்


- டி.ஆர்.மோகன்ராம், தலைவர்சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ்

தனிநபர் வருமான வரி குறைப்பு மற்றும் நிரந்தர கழிவு ரூ.75 ஆயிரமாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. முத்ரா கடன் தொகை வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தொழில் முனைவோர் தங்கள் தொழிலை விரிவுபடுத்த முடியும்.

புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத சம்பளம் அரசு சார்பில் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அற்புதமானது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் மின்னணு வர்த்தக ஏற்றுமதி மைங்களை அமைப்பது வரவேற்புக்குரியதே. தங்கம், வெள்ளி, இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பது, அவற்றை வாங்கும் நுகர்வோரை உற்சாகப்படுத்தும்.

அரசு ஊழியர்களுக்கு விரோதமானது


--ஆ.செல்வம், பொதுச்செயலாளர்தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்து பழைய திட்டம் அமல்படுத்தப்படவில்லை. இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகா உள்பட சில மாநிலங்களில் இதனை அமல்படுத்தி உள்ளனர். புதிய பென்ஷனில் இந்தியா முழுவதும் மத்திய அரசு ஊழியர்கள் 26 லட்சம் பேர், மாநில அரசு ஊழியர்கள் 72 லட்சம் பேர் என ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கான சமூகபாதுகாப்பான பழைய திட்டம் அமல்படுத்தப்படவில்லை.

மத்திய அரசு அலுவலகம், பொதுத்துறை நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் மேலான காலியிடங்கள் உள்ளன. அதனை பூர்த்தி செய்யவும் எந்த அறிவிப்பும் இல்லை. இங்கு ஒப்பந்த முறையிலான நியமனங்களை ரத்து செய்து, காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும். வருமான வரிவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு போதுமான நிதிஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே ஒட்டுமொத்தமாக மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விரோதமானதாகவே பார்க்கிறோம்.

பெண்கள் மேம்பாடு பெறுவர்


- உஷாமுத்துராமன்குடும்பத்தலைவி, திருநகர்

குறு, சிறு, நடுத்தர உற்பத்தித் தொழில் நிறுவனங்களுக்கு அதிக கடன் உதவி செய்வதால் தொழில்நுட்ப வளர்ச்சி நிச்சயம் உயரும். பெண்கள் முன்னேறினாலே அந்த நாடு முன்னேற்ற பாதையில் பீடுநடை போடும் என்பது உண்மை. பெண்களுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும், பெண்கள் மேம்பாட்டுக்காகவும் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கி இருப்பது அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

மருத்துவத் துறையில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளித்து இருப்பது நல்லதொரு திட்டம். விமானநிலையங்கள் கட்டுவதற்கு நிதிஒதுக்கீடு செய்திருப்பதால் விமான பயணிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். என்னதான் இல்லை மத்திய பட்ஜெட்டில் என்று எண்ணி எண்ணி பாராட்ட வைக்கும் அற்புத பட்ஜெட் இது.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும் வேளாண் உற்பத்தி பெருகும்


- பேராசிரியர் தீனதயாளன்பொருளியல் துறை, மதுரைக் கல்லுாரி

மத்திய அரசின் இப்பட்ஜெட் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, கல்வி வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு, வேளாண்மை, தொழிற் துறை வளர்ச்சி, சமூக மேம்பாடு, ஏழை மக்களின் நலன் முதலியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளது.

நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்பில் மாற்றம் என்பது தனி நபர்களுக்கும், தொழில் செய்பவர்களுக்கும் ஊக்கத்தை தரும். பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை 4.09 சதவீதம் என்பது வரவேற்புக்குரியது. இளைஞர் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாட்டிற்காக ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு என்பது வேலையில்லாத பட்டதாரிகளின் வாழ்வில் ஒளியேற்றும் என்பதில் மாற்றமில்லை.

வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். அத்துடன் ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. லாபத்தில் 20 சதவீதம் குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளை உற்சாகப்படுத்தும்.

ஏஞ்சல் வரி நீக்கம், வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீத்தில் இருந்து 35 ஆக குறைப்பு, ஆன்லைன் வர்த்தக வரிகுறைப்பு போன்றவை தொழில் வளர்ச்சிக்கு உதவும். கல்விக்கடன் உச்சவரம்பை ரூ.10 லட்சமாக உயர்த்தியது, பெற்றோரின் சுமையை குறைக்கும்.

ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்கும் வகையில், தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்திருப்பது மாதச் சம்பளம் பெறுவோருக்கு ஆறுதலான விஷயம்.

தங்கம் குறைவது மகிழ்ச்சி


- உமா, அழகுக்கலை நிபுணர்ஒத்தக்கடை

ஏழைகள், பெண்களுக்கு இப்பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும் திட்டம், முத்ரா திட்டத்தின் கீழ் சுயதொழில் புரியும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி போன்றவை பெண்கள் மேம்பாட்டிற்கு உதவிகரமாக அமையும். அவ்வகையில் பெண்கள் மேம்பாட்டு திட்டங்களுக்கு மட்டும் இப்பட்ஜெட்டில் ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது பிரமிப்பாக உள்ளது. தங்கம் வெள்ளி இறக்குமதிக்கு ஏற்கனவே இருந்த 15 சதவீதம் வரியை 6 ஆக குறைத்துள்ளதன் மூலம் தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது, பெண்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு.

நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கலாம்


- ஸ்வப்னாகுடும்பத் தலைவி, வில்லாபுரம்

ஒரு கோடி வீடுகளுக்கு சோலார் திட்டம், தங்கம் வெள்ளி மீதான சுங்க வரி குறைப்பு, கல்விக் கடன் அதிகரிப்பு, பிரதமர் வீடுகள் திட்டம், முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் ரூ.20 லட்சமாக உயர்வு, பெண்கள் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை பார்க்கும்போது சந்தோஷமாக தான் உள்ளது. ஆனால் ஒதுக்கப்பட்ட நிதிக்கான திட்டங்கள் முழுவதும் நிறைவேற்றப்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவ்வாறு நடந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் தேசிய அளவில் பெண்கள் முன்னேற்றத்தை நாம் கண்கூடாக பார்க்கலாம். தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்திருக்கலாம்.

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்


- ஆஷிகாகல்லுாரி மாணவி

இப்பட்ஜெட்டில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மீது தனிக்கவனம் செலுத்த பட்டுள்ளது. குறிப்பாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நடுத்தர மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களும் தாராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.4.1 கோடி இளைஞர்கள் நலனுக்காக 5 அம்சங்கள் கொண்ட சிறப்பு திட்டங்களை நிறைவேற்ற ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு, கல்வி வேலைவாய்ப்புக்கு ரூ.1.48 லட்சம் ஒதுக்கீடு போன்றவை இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் அமையும் என்பதில் நம்பிக்கை தந்துள்ளது.

அரசு ஊழியர்கள் கனவு முழுமை பெறவில்லை


- தென்கரை முத்துப்பிள்ளைமதுரை மாவட்டத் தலைவர்தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கம்

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் நடவடிக்கையில் நிரந்தர கழிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ரூ. 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். வெளிநாட்டு உயர்கல்வி படிப்பிற்கான கல்விக் கடன் தகுதி உள்ளவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும் என்ற அறிவிப்பு பயனுள்ளது. ஆனால் தகுதி என்பதற்கான விளக்கம் இல்லை. ரூ.10 லட்சம் என்பதை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கும் படி இருந்தால் இன்னும் பலர் பயனடைவர். பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு இல்லாததால் அரசு ஊழியர்களின் கனவை முழுமையாக பூர்த்தி செய்யாத பட்ஜெட் ஆக இதை பார்க்கிறோம்.

- நமது நிருபர் குழு -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us