ADDED : ஜூன் 08, 2024 06:09 AM
மதுரை : தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் சார்பில் மதுரை மாவட்டத்தில் மாடுகளுக்கு கால் மற்றும் வாய் காணை நோய்க்கான தடுப்பூசி திட்டத்தை ஜூன் 10 ல் தனக்கன்குளத்தில் கலெக்டர் சங்கீதா துவக்கி வைக்கிறார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) நந்தகோபால் கூறியதாவது: மாவட்டத்தில் 2 லட்சத்து 8ஆயிரத்து 150 மாடுகள் உள்ளன. வைரஸ் தாக்குதல் மூலம் மாடுகளுக்கு கால் மற்றும் வாய்ப்பகுதியில் புண் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆறுமாத வயதுடைய கன்றுகள் முதல் முதிர்ந்த மாடுகள் வரை தடுப்பூசி செலுத்த வேண்டும். இதற்காக மாவட்டத்தில் டாக்டர், கால்நடை பராமரிப்பு ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய 57 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மூலம் ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை தினமும் காலை 7:00 முதல் காலை 9:00 மணி வரை கிராமங்கள் தோறும் முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.