Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மதுரையின் பாரம்பரிய மரங்கள் மீட்கப்படுமா

மதுரையின் பாரம்பரிய மரங்கள் மீட்கப்படுமா

மதுரையின் பாரம்பரிய மரங்கள் மீட்கப்படுமா

மதுரையின் பாரம்பரிய மரங்கள் மீட்கப்படுமா

ADDED : ஜூன் 12, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
மதுரை : மதுரையில் வைகையாற்றின் கரையோரம் செழித்து வளர்ந்த நீர்க்கடம்பு, நீர்மருதம் மரங்கள் தற்போது அழிவின் விளிம்பில் இருப்பதால் இவற்றை மீட்க வனத்துறை முயற்சி செய்ய வேண்டும்.

மதுரைக்கு கடம்பவனம் என்ற பெயரும் உண்டு. திருமருதத்துறை என்று பரிபாடல், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது மதுரை நகருக்குள் 50 கடம்ப மரங்கள், 20 க்கும் மேற்பட்ட மருத மரங்களே உள்ளன. சோழவந்தான், திருவேடகம், குருவித்துறையில் ஒன்றிரண்டு மருதமரங்கள் வைகை ஆற்றோரம் உள்ளன. மேலக்கால் வைகை கரையில் இருந்து விரகனுார் தடுப்பணை வரை மாநகராட்சி எல்லைக்குள் ஒரு மருதமரம் கூட இல்லை என்பது வேதனை தரும் தகவல் என்கிறார் மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர் கார்த்திகேயன்.

அவர் கூறியதாவது:

மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் உள்ள கடம்பவன ஈஸ்வரர் கோயிலில் 150 ஆண்டுகால பழமையான கடம்ப மரம் உள்ளது. இடையபட்டி கோயில் காட்டில் மட்டும் 400 கடம்ப மரங்கள் வளர்ந்தாலும், நகருக்குள் 50 என்ற அளவில்தான் உள்ளன. மதுரையைப் பொறுத்தவரை கடம்ப மர விதைகளின் முளைப்புத்திறன் காட்டில்தான் அதிகமாக உள்ளது. மற்ற இடங்களில் விதைகள் மூலம் கன்றுகளை உற்பத்தி செய்வது அரிதாக உள்ளது. கடம்ப மர இலைகளில் மட்டுமே முட்டையிடும் தளபதி பட்டாம்பூச்சிகள் உள்ளன. மரங்கள் அதிகமானால் பட்டாம்பூச்சிகளும் அதிகரிக்கும்.

ஊமச்சிகுளம் வீரபாண்டி பகுதியில் 250 ஆண்டு கால பழமையான மருதமரம் உள்ளது. மாநகராட்சி அலுவலகத்தில் ஒன்று, அரசரடியில் 4 என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே மருதமரங்கள் இன்றும் உள்ளன. நீர் நிலைகளை ஒட்டி நீர்க்கடம்பு, நீர்மருதம் மரங்கள் செழித்து வளரும். அதனாலேயே வைகை ஆற்றங்கரையை ஒட்டி இம்மரங்கள் வளர்ந்திருந்தன. தற்போது இவற்றின் எண்ணிக்கை மதுரையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆற்றங்கரையோரம் மீண்டும் இம்மரக்கன்றுகளை நட வேண்டும். அதற்கு வனத்துறை நீர்க்கடம்பு, நீர்மருத மரங்களின் விதைகளில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். ஒவ்வொரு தாவரத்தைச் சார்ந்தும் பல உயிரினங்கள் வாழ்வதால் அழிவின் விளிம்பில் இருந்து மதுரையின் பாரம்பரிய மரங்களை மீட்க வேண்டும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us