ADDED : ஜூன் 03, 2024 03:27 AM

திருமங்கலம்: திருமங்கலம் - ராஜபாளையம் ரோட்டில் நான்கு வழிச்சாலைக்கான வேலைகள் நடந்து வரும் பகுதிகளில் பள்ளங்கள் தோண்டியுள்ளனர். இந்த ரோட்டில் எச்சரிக்கை போர்டுகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருமங்கலம் முதல் கொல்லம் வரையான ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற தற்போது திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை பணிகள் நடக்கின்றன.
ஒரு சில இடங்களில் ரோடு வேலைகள் ஒரு பகுதி முடிந்து உள்ளது. மற்ற பகுதிகள் மற்றும் கிராமங்களுக்கு செல்லும் ரோடுகளின் விலக்கு பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
சாலைகள் அமைக்கவும், பாலம் கட்டுவதற்காகவும் தார் ரோட்டையொட்டி சில இடங்களில் 3 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் இந்தப் பள்ளம் இருக்கும் இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் எதுவும் வைக்கவில்லை.
மணல் அடங்கிய சாக்கு பைகளோ, இரவில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் போன்றவையோ ஒட்டப்படவில்லை.
இதனால் ராஜபாளையம் திருமங்கலம் ரோட்டில் வாகன ஓட்டிகள் விபத்து அபாயத்தோடு செல்ல வேண்டியுள்ளது. எதிரில் கனரக வாகனங்கள்
ஏதேனும் வந்தால் ஒதுங்கக்கூட வசதி இல்லை.
எனவே ரோடு அமைக்கும் கட்டுமான நிறுவனங்கள் ஆங்காங்கே எச்சரிக்கை பதாகைகள், ஸ்டிக்கர்களை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.