/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரேஷன் அரிசி, சீனி மூடையில் குத்துாசியால் குத்தி 'ஆட்டைய' போடுறாங்கய்யா: லோடுமேன்கள், விற்பனையாளர்கள் 'டிஸ்யூம்' ரேஷன் அரிசி, சீனி மூடையில் குத்துாசியால் குத்தி 'ஆட்டைய' போடுறாங்கய்யா: லோடுமேன்கள், விற்பனையாளர்கள் 'டிஸ்யூம்'
ரேஷன் அரிசி, சீனி மூடையில் குத்துாசியால் குத்தி 'ஆட்டைய' போடுறாங்கய்யா: லோடுமேன்கள், விற்பனையாளர்கள் 'டிஸ்யூம்'
ரேஷன் அரிசி, சீனி மூடையில் குத்துாசியால் குத்தி 'ஆட்டைய' போடுறாங்கய்யா: லோடுமேன்கள், விற்பனையாளர்கள் 'டிஸ்யூம்'
ரேஷன் அரிசி, சீனி மூடையில் குத்துாசியால் குத்தி 'ஆட்டைய' போடுறாங்கய்யா: லோடுமேன்கள், விற்பனையாளர்கள் 'டிஸ்யூம்'
ADDED : ஜூன் 07, 2024 06:33 AM

மதுரை: நுகர்பொருள் வாணிப கழக கோடவுனில் இருந்து லாரிகள் மூலம் கூட்டுறவு ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரும் அரிசி, சீனி மூடைகளில் குத்துாசி மூலம் குத்தி பொருளை ‛ஆட்டைய' போடுவதாக தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: நுகர்பொருள் வாணிப கழக கோடவுன்களில் இருந்து குறைந்த எடையுடன் தான் பொருட்களை பெறுகிறோம். 50 கிலோ அரிசி, 600 கிராம் சாக்கு எடையுடன் சேர்த்து 50.600 கிலோ, சீனிக்கு 50.300 கிலோ இருக்க வேண்டும். ஆனால் அரிசி, சீனி மூடையில் 45 கிலோ தான் இருக்கிறது. ஒரு ரேஷன் கடைக்கு மாதத்திற்கு 1000 அரிசி மூடை, 50 சீனி மூடைகளில் மூடைக்கு 5 கிலோ வீதம் குறைவதை கணக்கிட்டால் எடை குறைவே 5 டன் தாண்டி விடும். ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சீனி, கோதுமை, பச்சரிசி இருப்பை ஆய்வு செய்யும் அதிகாரிகள் மூடை எடை குறைவாக இருந்தால் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து நேர்மையாக எடையிட்டு அனுப்ப வேண்டும். கேட்டால் நீங்களே எடையை சரிபார்த்து மூடையை இறக்குங்கள் என்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக புதிய திருட்டு பிரச்னையை சந்தித்து வருகிறோம். கோடவுனில் இருந்து ரேஷன் கடைக்கு லாரிகளில் ஏற்றப்படும் மூடைகளை குத்துாசியால் குத்தி அரிசி, சீனியை லோடுமேன்கள் கபளீகரம் செய்கின்றனர். இதுவும் எடை குறைவு பிரச்னைக்கு ஒரு காரணம்.
கோடவுனில் இருந்து ரேஷன் கடைகளுக்கு மூடைகளை இறக்கும் போது அதற்கான கூலியை லீடு சொசைட்டி தனியாக வழங்குகிறது. ஆனால் மதுரையில் மட்டும் லோடுமேன்கள் ஒரு குவிண்டால் மூடையை இறக்குவதற்கு ரூ.15 வீதம் தனியாக வசூல் செய்கின்றனர். தரமறுத்தால் பொருட்களை கொண்டு வராமல் அலைக்கழிக்கின்றனர். இதனால் நுகர்வோருக்கு பொருட்களை வழங்கமுடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. குத்துாசி திருட்டையும் கட்டண வசூலையும் கூட்டுறவுத்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் குருமூர்த்தி கூறியதாவது: லோடுமேன்களுக்கு எந்த தொகையும் கொடுக்க வேண்டாம். ரேஷன் கடைக்கு செல்லும் லாரியின் பின்னால் லோடுமேன்கள் அமரக்கூடாது, முன்சீட்டு அருகில் தான் உட்கார வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். மூடைகளில் ஒன்றிரண்டை எடுத்து விற்பனையாளர் எடையை சரிபார்க்க வேண்டும். அப்போது எடை குறைந்திருந்தால் அந்தந்த சார்பதிவாளரிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.