ADDED : ஜன 04, 2024 10:33 AM
கிணற்றில்
மூழ்கி பெண் பலி
பாகலுார் அருகே சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் சிவராஜ் மனைவி வனஜா, 24. இவருக்கு, 5 ஆண்டுக்கு முன் திருமணமானது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் சூடுகொண்டப்பள்ளியிலுள்ள விவசாய கிணற்றில் இருந்து, வனஜா சடலம் மீட்கப்பட்டது.
அவர் குழந்தையில்லாமல் விரக்தியடைந்து, கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. திருமணமான, 5 ஆண்டுகளில் பெண் தற்கொலை செய்ததால், சப் கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
வேலுநாச்சியார், கட்டபொம்மன் பிறந்த நாள் விழா
தேன்கனிக்கோட்டையில், சுதந்திர போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, மணிக்கூண்டிலுள்ள அவர்களது சிலைக்கு பொதுமக்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. டாக்டர்
சுப்பிரமணி மற்றும் சுனில்,
பாண்டியன், ஆரிப் உல்லா, சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.2.22 கோடியில் வளர்ச்சி பணிகள்
ஓசூர் ஒன்றியத்தில், 2.22 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஓசூர் ஒன்றியத்தில், தேன்கனிக்கோட்டை மெயின் ரோட்டில் இருந்து, டி.பாரந்துார் கிராமம் வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 1.02 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. முதுகானப்பள்ளி முதல் ஒட்டர்பாளையம் வரை, 56 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து, டி.பாரந்துார், முகலுார், வி.அக்ரஹாரம், எஸ்.முதுகானப்பள்ளி, பி.செட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில், 14.50 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஒன்றிய கவுன்சிலர்
சம்பத்குமார், பஞ்., தலைவர் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.24 லட்சத்தில் வகுப்பறை
கட்டுமான பணிகள் துவக்கம்
ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,840 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கிருஷ்ணகிரி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, இரு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட, 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்பணியை, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., செல்லக்குமார் நேற்று காலை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நட்டு வைத்தார். அவரிடம் இன்னும் கூடுதல் வகுப்பறைகள் கட்ட நிதி ஒதுக்கி தருமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஓசூர் மாநகராட்சி கல்விக்குழு தலைவர் ஸ்ரீதரன், நரமைப்பு குழு தலைவர் அசோகா, பள்ளி தலைமையாசிரியர் நர்மதாதேவி, காங்., மாவட்ட துணைத்தலைவர் கீர்த்திகணேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் தான்யா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு
டி.எஸ்.பி., வாழ்த்து
கர்நாடகா மாநிலத்தில், தென்னிந்திய அளவிலான சிலம்பம் விளையாட்டு போட்டிகள் நடந்தன.
இதில், தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திர மாநிலங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விளையாடினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இருந்து பங்கேற்ற பள்ளி மாணவ, மாணவியர், 20 பேர் போட்டிகளில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றனர்.
அவர்களை, ஓசூர் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
பா.ம.க., பூத் கமிட்டி
நிர்வாகிகள் கூட்டம்
ஊத்தங்கரையில், பா.ம.க. கட்சியின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., மேகநாதன் தலைமை வகித்து, பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட தலைவர் அண்ணாமலை, தேர்தல் பணிக்குழு மாவட்ட செயலாளர் குமரேசன் மற்றும் பா.ம.க., ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அயோத்தி ராமர் கோவில்
அழைப்பிதழுக்கு சிறப்பு பூஜை
அயோத்தி ராமர் கோவிலில் வரும், 22ல்
கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதற்காக,
கும்பாபிஷேக அழைப்பிதழ்கள் வழங்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையில் உள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை, ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில், கும்பாபிஷேக அழைப்பிதலுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, வீடு, வீடாக பொதுமக்களுக்கு கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பாலாஜி குருக்கள், பா.ஜ., மாவட்ட துணைத்தலைவரும், ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தர்மபுரி ஒருங்கிணைப்பாளருமான ராஜேந்திரன், கிளைத்தலைவர் ஹசீனா, சசிகலா உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.பி., அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் நேற்று நடந்தது.
இந்த குறை தீர்க்கும் முகாமில், 85 மனுக்கள் பெறப்பட்டு, 77 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கப்பட்டது.
இதில், ஏ.டி.எஸ்.பி., இளங்கோவன், டி.எஸ்.பி., செந்தில்குமார், ராமசந்திரன், நாகலிங்கம், மகாலட்சுமி, மற்றும் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், அன்பழகன், சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்
3 பவுன் செயின் திருடியவர் கைது
கடத்துார் அடுத்த திண்டலானுாரை சேர்ந்தவர் பெருமாள், லாரி டிரைவர். இவர் வழக்கம் போல கடந்த, 31ல் வேலைக்கு சென்றார். இவரது மனைவி வன்னியக்கொடி, அவரது தாய் வீடான அய்யம்பட்டிக்கு சென்று விட்டார்.
இந்த நேரத்தில் சில்லாரஹள்ளியை சேர்ந்த விஜய், 26, என்பவர் வீட்டில் நுழைந்து, எதையோ எடுத்து கொண்டு ஓடினார்.
தகவலறிந்து வந்த பெருமாள், வீட்டில் பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த, 3 பவுன் தங்க செயின், அரை பவுன் தோடு திருட்டு போயிருந்தது. புகாரின்படி, கடத்தூர் போலீசார் விஜய்யை கைது செய்து, நகைகளை மீட்டனர்.
மத்திய கூட்டுறவு வங்கி
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி மாவட்ட தலைமை அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் சாமிக்கண்ணு, பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாநில துணைத்தலைவர் அறிவழகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு, கடந்த காலங்களில் வழங்கப்பட்டது போல, 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மருத்துவப்படி, பயணப்படி, அகவிலைப்படி ஆகியவற்றை உயர்த்தி வழங்க வேண்டும். பறிக்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து வழங்க வேண்டும். 2015- - 2016 பணியாளர்களுக்கு பணி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும். மாநில, மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பூண்டு விலை உயர்வுதர்மபுரி மாவட்டத்திலுள்ள, ஐந்து உழவர் சந்தைகளில், பூண்டின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அதன்படி, கடந்த மாதத்தில் ஒரு கிலோ பூண்டு, 220 ரூபாய்க்கு விற்றது. பின், விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ, 250 ரூபாய்க்கும், நேற்று, 270 ரூபாய் எனவும் விற்பனையானது. பூண்டின் இந்த தொடர் விலை உயர்வால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மது பதுக்கி விற்ற 5 பேர் கைது
அரூர் போலீஸ் டி.எஸ்.பி., நாகராஜன் உத்தரவின் படி, தனிப்பிரிவு எஸ்.ஐ., சக்திவேல் உள்ளிட்ட போலீசார், பொம்மிடி பகுதியில் மது விலக்கு சம்பந்தமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்த, பொம்மிடி வினோபாஜி தெருவை சேர்ந்த சின்னம்மாள், 66, ரகுபதி, 50, பையர்நத்தம் பகுதியை சேர்ந்த லட்சுமி, 66, மஞ்சநாய்க்கன்தண்டாவை சேர்ந்த சங்கர், 57, வேப்பமரத்துாரை சேர்ந்த கிருஷ்ணன், 52, ஆகிய, 5 பேரை பிடித்து, பொம்மிடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், 5 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்கள்
விற்ற கடைகளுக்கு 'சீல்'
பாலக்கோடு மற்றும் வெள்ளிச் சந்தையில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த, கடைகளுக்கு அபராதம் விதித்து, அக்கடைகளுக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சுகர்மில் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்தார். அதில், தக்காளி மார்க்கெட் அருகில் பீடாகடை, வெள்ளிச்சந்தை ஜங்சன் பகுதியில் பேன்சி ஸ்டோர் என, 2 கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா இரண்டு கடைகளுக்கும் தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, 'சீல்' வைக்க உத்தரவிட்டார். அதைதொடர்ந்து, அலுவலர் நந்தகோபால், இரண்டு கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து, கடைக்கு, 'சீல்' வைத்தனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கமிட்டி உறுப்பினர் பெருமாள் தலைமையில், போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தர்மபுரி, பாரதிபுரம் மண்டல கிளை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 15வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களை கொத்தடிமையாக்கும் போக்கை கைவிட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி கோஷமிட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சீருடை பணியாளர் தொழிற் சங்க செயலாளர் சிவசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியன் கல்வி நிறுவனங்கள் நடத்திய
மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள இந்தியன் கல்வி நிறுவனங்கள் சார்பாக, தலைமை பண்பு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சியாளர் ராம்கி விஜயன் மூலம் ஐ.எம்.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு, 2 நாட்கள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தது.
இதில், ஆசிரியர்கள் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது மற்றும் எல்.எஸ்.ஆர்.டபிள்யு.,- முறையில் எவ்வாறு சிறப்பாக கற்பிப்பது போன்ற நுணுக்கங்கள் குறித்து விளக்கமளித்தார். மேலும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், மாணவர்கள், வருங்காலத்தில் எந்தெந்த துறைகளில் சாதிக்க முடியும் என விளக்கினார். தொடர்ந்து மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு, இந்தியன் கல்வி நிறுவனங்களின் சேர்மன் பழனிவேல் தலைமை வகித்தார். ஐ.எம்.எஸ்., பள்ளி முதல்வர் மணிகண்டன், ஐ.பி.எஸ்., பள்ளி முதல்வர் லதா, ஐ.எம்.எஸ்., பள்ளி துணை முதல்வர் சிலம்பரசன், மேலும், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.